2011-05-09 16:13:19

வாரம் ஓர் அலசல் – "கத்தியைத் தீட்டாதே, உன் புத்தியைத் தீட்டு"


ஜூன்20,2011. “உன் மீது ஆளும் சக்தியைப் பிறருக்கு நீ எப்போதும் கொடுக்கக் கூடாது. அதுபோல் நீயும் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது”. இவ்வாறு சொன்னவர் மறைந்த மெய்யியலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தன் மீதான ஆளும் சக்தியை பிறருக்கு கொடுக்காமல் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக, உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வாழ்ந்து வந்த ஒரு பயங்கரவாதி இந்த மே மாதம் ஒன்றாந்தேதி இரவில் மற்றவர்கள் கையில் அகப்பட்டு வீழந்தார். இப்படி வீழ்ந்து மடிந்தவர்தார் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன். இவர் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் நாற்பது நிமிடத் துப்பாக்கிச் சூடுகளில் சரிந்து பலியானார். உலக வரலாற்றிலேயே அதிகபட்சமாக, ஒரு பயங்கரவாதியின் தலைக்கு 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது ஒசாமா பின் லேடனுக்குத்தான். அமெரிக்க வரலாற்றில், அதிக விலை கொடுத்து அரங்கேற்றப்பட்ட கொலையாகவும் பின் லேடனின் கொலை விமர்சிக்கப்படுகிறது. இதுவரை ஒசாமாவை தேடியும், போர்களுக்காகவும் அமெரிக்கா செலவழித்த நிதி 58 இலட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் என அமெரிக்க பாராளுமன்ற ஆய்வு அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது. இந்த நிதியில், 63 விழுக்காடு ஈராக்கிலும், 35 விழுக்காடு ஆப்கானிலும் அமெரிக்க அரசால் செலவிடப்பட்டுள்ளது. உலகளவில், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க இராணுவ மையங்களைத் திறக்க, ஒரு இலட்சத்து, 33 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 27 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு ஆய்வு நடத்தியவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை. பயங்கரவாதி பின் லேடனைப் பிடிக்க, அமெரிக்கா இழந்த வீரர்கள், 6,000 பேர். மேலும், 55 ஆயிரம் வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தவுடனேயே நள்ளிரவு என்றுகூடப் பார்க்காமல் அந்நாட்டு வீதிகளில் மக்கள் கூடி, “வாழ்க யு.எஸ்.எ வாழ்க யு.எஸ்.எ” என்று ஆனந்த நடமாடினார்கள். ஓர் ஆளின் மரணம் ஒரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உலக அளவில் பலருக்கு அத்தனை திருப்தியை அளித்திருக்கிறது. பின்லேடனின் முடிவு குறித்து நாடுகளின் தலைவர்கள், மூத்த அரசியல் தலைவர்கள், சமூகப் பார்வையாளர்கள், பாமரர்கள், நம் வத்திக்கான் வானொலி நேயர்கள் என ஒவ்வொருவருமே தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள், வலைத்தளத்தில் பதிவு செய்தார்கள். சிலர் “ஒரு பின்லேடனின் மரணம் பல பின்லேடனை உருவாக்கும்” என்றார்கள். ஒரு நாகப் பாம்பைக் காட்டி அதன் தலையிலிருந்து பல நாகங்கள் உருவாகுவதைத் தொலைக்காட்சிச் செய்தியில் காட்டினார்கள். பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம் பெறக்கூடும் என்ற அச்சத்தில் நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் வெளியிட்ட தனது செய்தியில், “கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு” என்று அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நினைவுபடுத்தியிருக்கிறார். எம் பெருமான் இயேசு கிறிஸ்துவும் தம் சீடர் பேதுருவிடம் சொன்னார் “உன் வாளை உறையில் போடு, வாளை எடுப்பவன் வாளாலே மடிவான்” என்று.

வாளை எடுத்த பலர் அதே வாளுக்கே இரையாகிப் போயிருப்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பின்லேடன் எப்படி உருவானார்? அவரைப் பற்றியக் குறிப்புக்களில் இப்படித்தான் வாசிக்கிறோம். 'ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடன்’ என்பதுதான் ஒசாமாவின் முழுப்பெயர். சவுதி அரேபியாவின் ரியாத்தில் பெரும் பணக்காரத் தந்தைக்குப் பிறந்தார். இவர் அவரது தந்தையின் பத்தாவது மனைவியின் மகன் மற்றும் அவரது தந்தையின் 54 பிள்ளைகளில் 17வது பிள்ளை. செல்வச் செழிப்பான சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஒசாமாவின் இளம் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. பின்லேடன், பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும், சிவில் பொறியியலும், மக்கள் நிர்வாகமும் படித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒசாமாவின் 17வது வயதில் அவருக்கு முதல் திருமணம் நடந்தது. பிறகு அவர் மேலும் நால்வரை மணந்தார். பின்லேடனுக்கு மொத்தம் 25 பிள்ளைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்!

ஒசாமா பின்லேடன், ஆயுத அரசியலை நோக்கியும் மத அடிப்படைவாத அமைப்பியலை நோக்கியும் சென்றதற்கு முக்கிய காரணம், ஆஃப்கானிஸ்தான் மீது சோவியத் ஒன்றியம் நடத்திய தாக்குதலே என்கிறார்கள். சோவியத்திற்கு எதிரானத் தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார். 1984ம் ஆண்டில், அஜாமும் பின்லேடனும் இணைந்து 'மக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர். பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து பணம், ஆயுதம் பெற்று, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குக் கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். மதச் சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும், அதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன், தனது நண்பர்களுடன் சேர்ந்து 1988-89ல் 'அல் கெய்தா' என்ற அமைப்பைத் தொடங்கினார். நைரோபி, கென்யா, டான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் `அல் கெய்தா' அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது. அதில் சுமார் மூவாயிரம் அப்பாவி பொது மக்கள் பலியானார்கள். இதுதான் பின்லேடன் மீது அமெரிக்காவின் தீராதக் கோபம் ஏற்பட காரணமாக இருந்தது. பின்லேடனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே, அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து விமானத்தாக்குதலை நடத்தியது. இறுதிக் கட்டமாக, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில், அபோதாபாத் நகரில் மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கப் படையினால் அவரது 55வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொதுவாக, “பயங்கரவாதிகள் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்தியதாக உணர்வார்கள். தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவார்கள். அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான தங்களுடைய கொள்கைகளுக்காக, தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். தங்கள் வன்முறைச் செயலை, குற்றச் செயலாக எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நிராதரவாக்கப்பட்டவர்களே. அவர்கள் சிறந்த விசுவாசிகளாகவும், சூழ்ச்சி கொண்டவர்களாகவும், இரக்கத்தன்மையற்ற கொடியவர்களாகவும் இருப்பார்கள்'' என்று சொல்லப்படுகிறது. "வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை, மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று தனது ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் "பயங்கரவாதம்''என்கிறார்கள்.

இந்தப் பயங்கரவாதம், தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரித் தீவிரவாதம், வலதுசாரி பயங்கர வாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம், அணுப் பயங்கரவாதம், வேதியப் பயங்கர வாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதைப் பயங்கரவாதம் என்று எந்த உருவெடுக்க முனைந்தாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிவதும், முகிழ்த்து விடாமல் எச்சரிக்கை கடைப்பிடிப்பதும், அறிவுடையோர் கடமையாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை சரித்திரம் நமக்குச் சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறது. தனி நபர்களையும், அப்பாவிகளையும் கொல்லும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை யாரும் நியாயப்படுத்துவதற்கான அடித்தளம் அறவே கிடையாது என்றுதான் பழுத்த அரசியல் தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஆகவே அன்பர்களே, "வாளைக் கையில் எடுத்தவன், அந்த வாளாலே மடிவான்'' என்பது கண்கூடாக நாம் கண்டு வரும் உண்மை. எனவே "கத்தியைத் தீட்டாமல், நம் புத்தியைத் தீட்டுவதே'' வாழ்க்கைக்கு ஏற்ற பாடம்.

ஒருமுறை கடவுள் பரபரப்புடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எங்கே இவ்வளவு அவசரம் என விண்ணுலக வாசிகள் கேட்டனர். அதற்கு அவர், எனது பக்தன் ஒருவன், கடவுளே என்னைக் காப்பாற்று என்று கத்திக் கொண்டிருக்கிறான், அவனைக் காப்பாற்ற விரைகிறேன் என்றார். ஆனால் சென்ற வேகத்தில் அவர் திரும்பி வந்ததால் அதற்கு விண்ணகத்தார் காரணம் கேட்டனர். கடவுள் சொன்னார் –

“ஒரு பக்தர் நாம செபம் சொன்னபடியே அந்த ஆற்றங்கரையில் நடந்து வந்தார். தெரியாமல் அவரது கால் அங்கு வெளுத்துக் காயப்போட்டிருந்த துணி மீது பட்டு விட்டது. உடனே கோபம் கொண்ட சலவைக்காரர், என் பக்தரை அடித்துவிட பக்தனும் கடவுளே காப்பாற்று என்றார். நான் அவரைக் காப்பாற்ற அவரருகில் ஓடினேன். அதற்குள் அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்துக் கொண்டு சலவைக்காரரை அடிக்கப் போய்க் கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன்”.

அன்பர்களே, பகையால், பழிவாங்குதலால் வெஞ்சினத்தால், கோபத்தால், பொறாமையால் யாரும் எதையும் சாதித்ததாக சரித்திரம் கிடையாது. மாறாக அன்பால், மன்னிப்பால், சமாதானத்தால் சாதித்தவர்களைத்தான் காண்கிறோம். பிறர் துயர் தீர்க்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்களே. இந்த அன்புக்கு வேற்றுமை இல்லை. பகைமை இல்லை. ஆணவம் இல்லை.
அன்பு இருக்கும் இதயமே ஆண்டவன் இருக்கும் ஆலயம்.







All the contents on this site are copyrighted ©.