2011-05-09 16:10:50

மே 10 வாழ்ந்தவர் வழியில் .....


தியோடர் ரூஸ்வெல்ட் என்பவர் இராணுவ அதிபராக இருந்த போது ஒருநாள் விமான நிலையத்தில் காத்திருந்தார். அச்சமயம் அங்கு வந்த ஒருவர், “தனது தாயை அவசரமாகப் பார்க்க வேண்டும், ஒரு விமானப்பயணச்சீட்டு தேவை” என்று கெஞ்சிக் கேட்டார். அது கிடைக்காததால் அவர் மனம் நொந்து திரும்பினார். அப்போது ரூஸ்வெல்ட் அந்த ஆளிடம் தனது பயணச்சீட்டைக் கொடுத்து விட்டுத் திரும்பினார். அப்போது அவரிடம், “அப்படியானால் உங்களது பயணம் என்ன ஆனது” என்று விமானநிலைய அதிகாரிகள் கேட்டார்கள். அதற்கு ரூஸ்வெல்ட், “நான் ஒரு ஜெனரல், அது ஒரு பதவி. ஆனால் அவர் ஒரு தாய்க்கு மகன்” என்றார்.
1908ம் ஆண்டு மே 10ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு வெர்ஜீனியாவில் அன்னையர் நாள் முதன் முதலில் கொண்டாடப்பட்டது. பொதுவாக மே மாதம் இரண்டாம் ஞாயிறு அனைத்துலக அன்னையர் நாள் சிறப்பிக்கப்படுகிறது. உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல் அம்மா என்பதாகும். கடவுளைத் தாயும் தந்தையுமானவரே என்றுதான் நாம் அழைக்கிறோம். உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட துறக்க முடியாத ஒரே உறவு தாயின் உறவு. தான் பெற்ற பார்வையிழந்த இரண்டு குழந்தைகள் பார்வை பெற வேண்டும் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்ட தமிழ்ச் செல்வி என்ற தமிழ்ப்பெண் பற்றித் அறிந்திருக்கிறோம். விவேகானந்தர் சொன்னார் – “இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள் தன் முழு வாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்” என்று.








All the contents on this site are copyrighted ©.