2011-05-09 15:54:44

திருத்தந்தை - சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் விசுவாசத்தைக் கொணர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை


மே 09, 2011. விசுவாசம் என்பது கலாச்சார மற்றும் சமூக பாரம்பரியங்களையும் தாண்டியது, அதன் மதிப்பீடுகளை, அரசியல் உட்பட அனைத்துத் துறைகளுக்கும் கிறிஸ்தவர்கள் கொணர வேண்டிய தேவை உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் வெனிஸ் நகரில் இஞ்ஞாயிறன்று ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் கலந்துகொண்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, பல்வேறு துன்பங்களையும் சித்ரவதைகளையும் தாண்டி வந்துள்ள கிறிஸ்தவம், இன்று தன் உண்மை நிலைகளை இழந்து, மக்களின் சமூக மற்றும் கலாச்சாரக் கூறுகளில் தன் மேம்போக்கான வாழ்வைக்கொண்டிருப்பதையே காண முடிகிறது என்றார்.
இறந்து உயிர்த்த கிறிஸ்துவிலான விசுவாச அனுபவம், நம் வாழ்வின் பாதையை ஒளிர்விக்காமல் இருப்பது குறித்த அக்கறையற்ற நிலைகளையும் சுட்டிக்காட்டி, கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.
துன்ப துயரங்கள், அநீதிகள் ஆகியவை கண்டு மனந்தளரும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை அவரின் வார்த்தை மற்றும் அவரின் திரு உடல் திரு இரத்த திருவருட்சாதனம் மூலம் மீண்டும் கண்டுகொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அவர்.
வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்று வரும் இந்நாட்களில், இத்தாலியர்கள் மனிதாபிமானத்துடன் அவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.