2011-05-09 16:02:53

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு


மே 09, 2011. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர், சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் சிக்கி, 1 இலட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 இலட்சத்து 15 ஆயிரத்து 458 பேர் காயமடைந்தனர் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் நடந்த சாலை விபத்து மரணங்களில் 50 விழுக்காடு ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏற்பட்டது எனவும், 33 விழுக்காடு சாலை விபத்துகளுக்கு, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களே காரணமாக அமைகின்றன எனவும், 70 விழுக்காடு விபத்துகள், ஓட்டுனர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அண்மை கணக்கெடுப்பின்படி, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 53 விழுக்காட்டினர், 25 மற்றும் 65 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.