2011-05-07 16:04:17

மே 08, வாழந்தவர் வழியில்...


உலகச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே 8ம் தேதி அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உலக அமைதிக்கான முதல் நொபெல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவருமான Jean Henry Dunant, 1828ம் ஆண்டு, மே 8ம் தேதி பிறந்தார். (மறைவு - அக்டோபர் 30, 1910) அவரது பிறந்த நாளே உலகச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என கடைபிடிக்கப்படுகிறது.
சுவிஸ் நாட்டவரான ஹென்றி, சோல்பெரினோ யுத்தத்தின்போது (The Battle of Solferino) போர்க்களத்தின் அவலங்களை நேரில் கண்டவர். முக்கியமாக, போரில் காயமுற்று கிடக்கும் வீரர்கள் உதவிகள் இன்றி அல்லலுற்றதை நேரில் கண்டு, அப்பகுதியில் இருந்த பெண்களை ஒருங்கிணைத்து, அவ்வீரர்களுக்கு உதவியவர். போரில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு, 1863ல் செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். இன்று, உலகச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் பல நாடுகளில் இயங்கி வரும் ஒரு மனிதாபிமான அமைப்பு. இவ்வியக்கத்தில் நாடு, இனம், மதம், வகுப்பு என்பனவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல், மனித உயிர்களையும், உடல் நலத்தையும் பாதுகாத்தல்; மனித உரிமைகளையும், மனிதர்களுக்குரிய மதிப்பையும் உறுதிப்படுத்துதல் போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 9,70,00000 தன்னார்வத் தொண்டர்கள் உலகம் முழுவதும் பணிபுரிகின்றனர். இவ்வியக்கம் உலக அமைதிக்கான நொபெல் விருதை 1917, 1944, 1963 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளது.







All the contents on this site are copyrighted ©.