2011-05-04 15:41:45

லிபியாவில் பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை எந்நாளும் அங்கீகரிக்க மாட்டோம் - Comboni மறைபரப்புப் பணியாளர்கள்


மே 04,2011. பிரச்சனைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை எந்நாளும் அங்கீகரிக்க மாட்டோம் என்று லிபியாவில் பணிபுரியும் ஒரு துறவற சபையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் Lake Garda என்ற இடத்தில் அண்மையில் கூடிவந்த Comboni மறைபரப்புப் பணியாளர்களின் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அருட்பணி என்ற தலைப்பில் நடந்த இக்கருத்தரங்கில் பங்குபெற்ற Camboni மறைபரப்புப் பணியாளர்கள், வன்முறை வன்முறையையே பெற்றெடுக்க முடியும் என்றும், இவ்வன்முறைகளில் அப்பாவி பொதுமக்களே பெருமளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.
மறைபரப்புப் பணியில் உள்ளவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும்போது, ஐரோப்பா தன்னைப் பற்றிய கவலைகளிலேயே மூழ்கியிராமல், உலகின் பல நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகளில் ஈடுபட முன்வர வேண்டுமென்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்சனைகளின் எதிரொலியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக விழையும் மக்களை ஐரோப்பா மனிதாபிமானத்துடன் வரவேற்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.