2011-05-04 15:48:31

மே 05, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........,


“புதுமைப்பித்தன்” என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906ம் ஆண்டு ல் பிறந்தார். தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்.
இவரது முதல் படைப்பான ‘குலோப்ஜான் காதல்’ காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர்.
சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் 108 சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின.
அவர் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
ஜெமினி நிறுவனத்தின் ‘அவ்வை’ மற்றும் ‘காமவல்லி’ என்ற திரைப்படங்களில் பணிபுரிந்தார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காக புனேயில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி, 1948ம் ஆண்டு மே 5-இல் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.