2011-05-04 15:37:26

உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, அருளாளர் இரண்டாம் ஜான்பால் இஸ்பெயின் நாட்டு இளையோரைத் தூண்டுவார் - பேராயர் Ignacio Munilla Aguirre


மே 04,2011. இஸ்பெயினில் உள்ள இளையோர் அங்கு நடைபெறவுள்ள உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களைத் தூண்டுவார் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார் பேராயர் Ignacio Munilla Aguirre.
உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்லாயிரம் இளையோர் இந்த மாநாட்டைக் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அதே வேளையில், இஸ்பெயினில் உள்ள இளையோரிடையே ஆர்வம் குறைந்து காணப்படுகிறதென்று San Sebastian உயர்மறைமாவட்டப் பேராயர் Aguirre கூறினார்.
இஸ்பெயின் நாட்டு இளையோர் மத்தியில் மத சார்பற்ற நிலை, நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவை அதிகம் பரவியுள்ளதால் எந்த ஒரு மதத்தின் மீதும் பிடிப்பில்லாமல் அவர்கள் வாழ்கின்றனர் என்றும், இளையோர் மேல் அதிக ஆர்வம் காட்டிய அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரையால் இவ்விளையோர் உலக இளையோர் மாநாட்டில் ஆர்வம் கொள்வர் என்றும் பேராயர் கூறினார்.
1986ம் ஆண்டு திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான்பால் இளையோருக்கென்று அளித்த ஒரு சிலுவை ஒவ்வொரு உலக இளையோர் மாநாட்டிற்கும் பயணம் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மத்ரித் நகரில் நடைபெற உள்ள இளையோர் மாநாட்டிற்கென இச்சிலுவை தற்போது இஸ்பெயின் நாட்டை அடைந்துள்ளதால், இளையோரிடையே புதியதொரு உற்சாகம் பிறந்துள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.