2011-05-02 16:06:14

கர்தினால் அகுஸ்தின் கார்சியா காஸ்கோ இ விச்செந்தே இறைபதம் அடைந்தார்.


மே 02, 2011. இஸ்பெயின் கர்தினால் அகுஸ்தின் கர்சியா காஸ்கோ இ விசெந்தே இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் மாரடைப்பால் காலமானதையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்நாட்டின் வலென்சியா உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் கார்சியா காஸ்கோவின் உறவினர்களுக்கும், அவர் பேராயராகப் பணியாற்றிய இந்த உயர் மறைமாவட்டத்தின் விசுவாசிகளுக்கும் தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை, மறைந்த கர்தினாலின் மேய்ப்புப் பணிகளை, குறிப்பாக குடும்பங்களுக்கான சேவைகளைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருந்த கர்தினால் கர்சியா காஸ்கோ, சனிக்கிழமையின் திருவிழிப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு திரும்பியபின் ஞாயிறு காலை இறைபதம் அடைந்தார்.
1931ம் ஆண்டு இஸ்பெயினில் பிறந்த இவர், 1992ம் ஆண்டு அந்நாட்டின் வலென்சியாவின் பேராயராக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் கர்சியா காஸ்கோவின் மரணத்துடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 198 ஆகக் குறைந்துள்ளது. இதில் 115 பேரே 80 வயதிற்குட்பட்டவர்கள்.








All the contents on this site are copyrighted ©.