2011-05-02 16:06:31

இந்தியாவில் கிராம பகுதி மக்கள் தரும் இலஞ்சம் 471 கோடி ரூபாய்.


மே 02, 2011. இந்தியாவில் கிராமப் பகுதி மக்கள் குடும்ப அட்டை, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைப் பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கொடுத்துள்ளனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
"இந்திய ஊழல் ஆய்வு 2010' என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட இலஞ்சம் 164 ரூபாய் என்றும், அசாம், குஜராத், கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு 2010 - 2011ம் ஆண்டில், செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த 471 கோடியே 80 இலட்சம் ரூபாய் அதற்குச் சமமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி வழங்கபட்ட இலஞ்சத்தில், பொதுப்பணித் துறைக்கு 156 கோடியே 80 இலட்சம் ரூபாயும், தண்ணீர் இணைப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கு 83 கோடியே 30 இலட்சம் ரூபாயும், மருத்துவமனை சேவை பெற 130 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டில் இருந்து இலஞ்சம் தருவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இலஞ்சப் பட்டியலில் சத்திஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன.








All the contents on this site are copyrighted ©.