2011-05-01 11:00:56

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வாழ்க்கை வரலாறு.


மே 1, 2011. இஞ்ஞாயிறன்று அருளாளராக திருச்சபையில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1920 ஆம் ஆண்டு மே மாதம் 18ந் தேதி போலந்தின் கிராக்கோவ் நகருக்கு 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதோவிச் எனுமிடத்தில் பிறந்தவர். கரோல் வொய்த்திவா மற்றும் எமிலியா காச்சொரொவ்ஸ்கா என்ற தம்பதியரின் கடைசிக குழந்தையாகப் பிறந்தவர் கரோல் யோசேஃப் வொய்த்திவா என்ற இயர் பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
இவர் தான் பிறப்பதற்கு முன்னரே தன் சகோதரியையும், எட்டாம் வயதில் தாயையும், 12ம் வயதில் தன் மூத்த சகோதரனையும், 21ம் வயதில் தன் தந்தையும் இழந்தார். தனக்கென்று சொல்லிக்கொள்ள நெருங்கிய உறவுகள் எதுவும் இல்லா நிலையில் 21ம் வயதிலேயே தனி மரமான திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், ஏற்கனவே குருத்துவ வாழ்வுக்கான தன் அழைப்பை உணர்ந்திருந்தார்.
இவர் நாடகத்துறைக்கென பயின்று வந்த பல்கலைக்கழகம், ஜெர்மன் நாத்சிகளின் ஆக்ரமிப்பால் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சோல்வே வேதியத் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார்.
ஆனால் இவர் குருவாவதைக் காண விரும்பிய தந்தையோ அப்போது உயிரோடு இல்லை. தந்தை இறந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னரே, 1946ல் நவம்பர் முதல் தேதி அனைத்துப் புனிதர் விழாவன்று குருவானார். உரோம் நகருக்கு உயர்கல்வி பயில அனுப்பப்பட்ட இவர், இரண்டே ஆண்டுகளில், அதாவது 1948ம் ஆண்டே இறையியலில் முனைவர் பட்டத்தை முடித்து தாய்நாடு திரும்பினார். பல பங்குத்தளங்களில் பணியாற்றியதுடன் பல்கலைக்கழக மாணவர்களின் ஆன்மீகக் குருவாகவும் செயல்பட்டார். மூன்றாண்டுகள் இவ்வாறு பணியாற்றியபின் 1951ல் மீண்டும் தன் இறையியல் மற்றும் மெய்யியல் மேல்படிப்பை போலந்து நாட்டிலேயே லூப்லின் பல்கலைகழகத்தில் தொடர்ந்தார். அதன் பின், நன்னெறி இறையியல் மற்றும் சமூக நெறி முறைகளின் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
1958 ஜூலை 4ம் தேதி கிராக்கோவின் துணை ஆயராக திருத்தந்தை 12ம் பத்திநாதரால் நியமிக்கப்பட்டார்.
1964ல் கிராக்கோவின் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1967ல் திருத்தந்தை 6ம் பவுலால் கர்தினாலாக உயர்த்தப்பட்டர்.
1962 முதல் 1965 வரை திருச்சபையில் இடம்பெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் 'இன்றைய உலகில் திருச்சபை' என்ற கொள்கைத்திரட்டை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர் இவர். 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பிறை முதலாம் ஜான் பால் 33 நாட்களிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 16ந்தேதி இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 22ம்தேதி 264வது திருத்தந்தையாக தனது 58ம் வயதில் பொறுப்பேற்றார்.
இத்திருத்தந்தை இத்தாலிக்குள் 146 திருப்பயணங்களையும் இத்தாலிக்கு வெளியே 104 திருப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். உரோம் ஆயர் என்ற முறையில் உரோமின் 332 பங்குகளில் 317ஐ நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இவர் எங்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டு கொண்டாட்டங்களில் இவர் உரையைக்கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்திற்கு மேல் இருந்தது. தன் இருபத்து ஆறரை ஆண்டு காலப் பதவியின் போது இவர் நடத்திய 1160க்கும் மேற்பட்ட புதன் மறைபோதகங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1கோடியே 76 இலட்சத்திற்கு மேல். இது தவிர, ஏனைய திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், திருப்பயணங்களின் போதும் இவரைக்காண வந்த மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம். உலக அரசுத்தலைவர்களை 738 தடவையும், பிரதமர்களை 246 முறையும் தன் பதவிக்காலத்தின்போது சந்தித்துள்ளார்.
இவரால் உருவாக்கப்பட்ட, உலக இளையோர் தினத்தின் 19 கொண்டாட்டங்களில் பல இலட்சக்கணக்கான இளையோரைச் சந்தித்துள்ளார். 1994ல் இவர் உருவாக்கிய, 'குடும்பங்களுக்கான உலக மாநாடு' குடும்பங்கள் மீதான இவரின் அக்கறைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
பிற மதங்களை மதித்தார். அவர்களோடு பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தார். அச்சியில் அனைத்து மதப்பிரதிநிதிகளைக் கூட்டி உலக அமைதிக்காகச் செபித்தார்.
1338 இறையடியார்களை அருளாளர்களாகவும், 482 பேரை புனிதர்களாகவும் அறிவித்துள்ளார்.
புனித குழந்தை திரேசாவை திருச்சபையின் மறைவல்லுனராக அறிவித்தார்.
பாப்பிறை பதவி காலத்தின்போது 231 பேரை கர்தினால் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 14 அப்போஸ்தலிக்கத் திருமடல்கள், 15 அப்போஸ்தலிக்க அறிக்கைகள், 11 அப்போஸ்தலிக்க சட்ட வரைவுகள், 45 அப்போஸ்தலிக்கக் கடிதங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
ஐந்து புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறை 'இறை இரக்கத்தின் ஞாயிறு' என அறிவித்த இந்தத் திருத்தந்தை, அந்த ஞாயிறுக்கான இரவு தயாரிப்பின்போது 2005ம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி 9.37 மணிக்கு இறைபதம் சேர்ந்தார். எங்கு சென்றாலும் மக்கள் கூட்டத்தை கவர்ந்த இத்திருத்தந்தையின் இறந்த உடலைத் தரிசிக்க 30 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்தனர்.
அவர் அடக்கம் செய்யப்பட்ட ஏப்ரல் 8ம்தேதி வரை மக்கள் கூட்டம் உரோம் நகரை நிரப்பியிருந்தது. சிலர் 24 மணி நேரம் வரை காத்திருந்து அவர் உடலைக் காண வேண்டியதாகியது. திருச்சபையில் ஒருவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கான படிகள் துவக்கப்பட, அவர் இறந்தபின் 5 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும் என்பது விதி முறை. ஆனால் திருத்தந்தை 16ம் பெனடிக்டோ, 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம்தேதியே, அவ்விதியிலிருந்து திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுக்கு விலக்கு அளித்தார். அதே ஆண்டு ஜூன் 28ம்தேதியே உரோம் மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் கமிலோ ரூயினி, புனிதர் பட்ட நிலைகளுக்கான ஆய்வுகளை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
திருச்சபையில் புனிதர் பட்ட நிலைக்கு முந்தைய படியான அருளாளர் நிலைக்கு ஒருவர் உயர்த்தப்படவேண்டுமெனில், அவரின் பரிந்துரை வழியாக புதுமை இடம்பெற்றிருக்க வேண்டும். மறைசாட்சியாக உயிரிழந்தவர்களுக்கு இதில் விலக்கு உண்டு. நீண்ட கால நரம்பு தளர்ச்சி நோயால் அவதியுற்ற பிரான்ஸ் நாட்டு அருட்சகோதரி மரிய சிமோன் பியர் என்பவர், நம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலிடம் வேண்டியதன் பேரில் முற்றிலுமாக குணம் பெற்றார். இதனை மருத்துவர்களும் தெள்ளத்தெளிவாக ஆய்வு செய்து புதுமையென ஏற்றுள்ளனர். தனக்கு முந்தைய திருத்தந்தையை, அதாவது தான் 25 ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய திருத்தந்தையை தானே அருளாளராக அறிவிக்கும் பாக்கியம் தற்போதைய திருத்தந்தையான 16ம் பெனடிக்டுக்கு கிட்டியுள்ளது என்று சொல்லலாம்.
நேயர்களே! இறை இரக்கத்தின் ஞாயிறும் தொழிலாளர் தினமுமான மே1ந்தேதி அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
இவர் போலந்தின் தொழிலாளர் இயக்கத்திற்கு ஆதரவளித்து, கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச ஆட்சி மாறி குடியரசு மலர வித்திட்டவர்.
தன் இளவயதிலேயே கல்குவாரியில் பணிபுரிந்ததால் தொழிலாளர்களின் துன்பம் அறிந்தவர்.
பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறையிலும், விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர்.
இளைஞர்களையும் நோயாளிகளையும் குழந்தைகளையும் அதிகம் அன்புசெய்தவர்.
நாத்சி காலத்தில் யூதர்களைக் காப்பாற்றத் தவறியதற்காக திருச்சபை சார்பில் யூதர்களிடம் மன்னிப்பை வேண்டியவர். யூத கோவிலுக்குச் சென்று அவர்களைக் கௌரவப்படுத்தியவர்.
இஸ்லாமியர்களின் மசூதிக்குச் சென்ற முதல் திருத்தந்தை இவர்.
ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் ஆக்ரமிப்பைத் தடுக்க முயன்றவர்.
திருச்சபையால் ஒருகாலத்தில் கண்டிக்கப்பட்ட அறிவியலாளர் கலிலேயோவைக் கௌரவப்படுத்தியவர்.
அன்னை மரி மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த இவர், பாத்திமா அன்னை திருவிழா அன்று சுடப்பட்டு அற்புதமான வகையில் உயிர் பிழைத்தவர்.
இறை இரக்கத்தின் ஞாயிறை உருவாக்கி, அதற்கு முந்தைய இரவு மரணமடைந்து, அதே ஞாயிறன்று அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்த உயரிய திருத்தந்தை, புதிய அருளாளர் இரண்டாம் ஜான் பால், நமக்காக இறைவனிடம் வேண்டுமாறு ஜெபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.