2011-05-01 14:17:50

அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கான திருவிழிப்புச் செப வழிபாடு


மே 01,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலை அருளாளராக உயர்த்தும் விழாவை முன்னிட்டு, உரோம் நகரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. உயிர்ப்புத் திருவிழா நாளில் இருந்தே உரோம் நகரில் எங்கு நோக்கினும் திருப்பயணிகள் கூட்டம்தான். அதிலும், சனிக்கிழமையன்று உரோம் நகரின் சிர்க்கோ மாசிமோ வளாகத்தில் இடம்பெற்றத் திருவிழிப்புச் செப வழிபாட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இளையோரின் எண்ணிக்கை பெருமளவில் இருந்தது, திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இளையோரை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளார் என்பதற்கு இது எடுத்துக்காட்டாய் இருந்தது.

இத்திருவிழிப்புச் செபவழிபாட்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரையால் குணம் பெற்ற அருள்சகோதரி மரி சிமோன் பியர் தன் சாட்சியத்தை வழங்கினார். இறையடியார் இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரையை வேண்டியதன் மூலம் தன் நரம்புத் தளர்ச்சி நோய் 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 2க்கும் 3க்கும் இடைப்பட்ட இரவில் பூரண குணம் பெற்றதாக இவர் தெரிவித்தார்.

இந்தத் திருவிழிப்புச் செப வழிபாட்டில் கலந்து கொண்ட இளையோருள் ஒருவரைச் சந்தித்தபோது, அவர், "இன்றைய இளையோர் மதம் குறித்து கவலைக் கொள்வது இல்லை என்பது உண்மைதான். ஆனால், திருத்தந்தை 2ம் ஜான்பால் எங்கள் மீது அன்பு கூர்ந்தார். எங்களுக்குத் தேவை அன்பே" என்றுரைத்தார். இது குரோவேசியா நாட்டைச் சேர்ந்த 21 வயது மத்தியா சார்லியா என்பவரின் சாட்சியம்.

இதே திருவிழிப்புச் செபவழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால் Stanislaw Dziwiszம் முன்னாள் திருத்தந்தையைக் குறித்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இவர் அத்திருத்தந்தையிடம் 40 ஆண்டுகாலம் தனிச் செயலராகப் பணியாற்றியவர். இவர் கூறினார்: "திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலுக்கு இருவித அன்பே இருந்தது. ஒன்று இறைவன். மற்றது மனிதகுலம். குறிப்பாக இளையோர். இரு முறைகளே அவர் கோபமுற்றதை நான் கண்டுள்ளேன். ஒன்று இத்தாலியின் சிசிலியில் மாபியா கும்பலுக்கு எதிராக தன் குரலை உயர்த்தியது. மற்றொன்று ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தது. 'போரால் எப்பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. நான் போரைப் பார்த்தவன்; போர் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்' என ஒரு மூவேளை ஜெப உரையில் குறிப்பிட்டபோது. இவ்வாறு அவர் இருமுறையே கோபப்பட்டுள்ளார்."
இந்தச் சாட்சியங்களுக்குப் பின், அங்கு கூடியிருந்தவர்கள் செபமாலை செபித்தனர். செபமாலையின் ஒவ்வொரு பத்து மணியும் உலகின் 5 மரியன்னைத் திருத்தலங்களால் செபிக்கப்பட, உரோம் நகரில் திருவிழிப்புச் செபவழிபாட்டில் இருந்தவர்களும் அதில் கலந்து கொண்டனர். போலந்தின் Krakow திருத்தலம், Tanzania, Lebanon, Mexico, மற்றும் Portugalன் பாத்திமா மரியன்னைத் திருத்தலங்கள் இந்த செபமாலையில் இணைந்திருந்தன. இவ்வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு வான்கோள் இணைப்புவழி தன் ஆசீரையும் இறுதியில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.