2011-04-30 16:22:53

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இந்த ஞாயிறு, மே மாதம் முதல் நாள், உலகின் பல கோடி மக்களின் கவனம் வத்திக்கானை நோக்கித் திரும்பியிருக்கும். ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இறையடியார் இரண்டாம் ஜான்பாலை அருளாளராக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று அழைக்கிறோம். இவ்வாண்டு மே முதல் நாள் இறை இரக்க ஞாயிறன்று இறையடியார் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படுவது பெரிதும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சி. ஏனெனில், இவர்தான் உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று 2000மாம் ஆண்டு உருவாக்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று இவர் அருளாளராக உயர்த்தப்படுகிறார்.

இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல சூழல்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, மனதில் அமைதியை உருவாக்கும் நேரத்தில் இந்த இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். அப்படி ஒரு சிகரத்தைத் தன் சீடர்கள் தொடுவதற்கு இயேசு உதவிய ஒரு நிகழ்ச்சியை இன்றைய நற்செய்தியாக நாம் வாசிக்கிறோம்.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திதிம் அல்லது தோமையார் என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார். இந்தச் சந்தேகத் தோமாவை இறை இரக்கத்தின் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார் இயேசு.

தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். அதுவும் நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை நாம் பல நேரங்களில் சந்தேகப்படும்போது, தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். ஆகவே, தீர்ப்புகளை எழுத பேனாக்களைத் திறந்து வைத்திருந்தால், அவைகளை மூடிவிட்டு, முதலில் அந்த நீதி இருக்கைகளை விட்டு எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்தச் சம்பவத்தைச் சிந்திப்போம்.

நற்செய்திகளின் இறுதிப் பகுதிகளை ஆழமாக ஆராய்ந்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்க முடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய் விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக்கோட்டைகள் தரை மட்டமாக்கப்பட்டன.
எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்து விட்டன. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பி விட்டன. யாரையும், எதையும் சந்தேகப் பட்டனர். தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது. இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதென்றால், அது தங்கள் அழிவு மட்டுமே என்று அறிவுப் பூர்வமான ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.
சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை சீடர்களால் நம்ப முடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஒரு அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிகளுக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல். இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும் போது, சந்தேகம் எழும். அறிவு அந்தச் செயலை ஏற்க மறுக்கும்.
ஆனால், அறிவும் அறிவியலும் சொல்வதை மட்டும் வைத்து வாழ்க்கையை நடத்திவிட முடியாதே. இரண்டும் இரண்டும் நான்கு தான். ஆனால், சில சமயங்களில் இரண்டும் இரண்டும் ஐந்தாகலாம் அல்லது, மூன்றாகலாம். இதைக் காண மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவு இங்கே உதவாது. எத்தனை முறை இது போன்ற அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கின்றன! நமது அறிவு ஒரு வழியில் சிந்திக்கும் போது, நமது மனம்... ஆழ் மனம் வேறு வழியில், அறிவுக்கு முற்றிலும் மாறுபட்ட வழியில் சிந்தித்திருக்கிறதல்லவா? பல சமயங்களில் அறிவை விட மனம் சொல்வது மிக அழகானதாய், அற்புதமானதாய், உண்மையாய் இருந்திருக்கிறது. உண்மைதானே?

இதோ ஓர் எடுத்துக்காட்டு... இவ்வாண்டு சனவரி 30ம் தேதி ஞாயிறன்று, இங்கிலாந்தில் Woodford Wells என்ற இடத்தில் இருந்த அனைத்துப் புனிதர்கள் ஆலயம் (All Saints Church) நிரம்பி வழிந்தது. மாலை நேரத் திருவழிபாட்டில் Jose Henriquez என்பவர் உரையாற்ற எழுந்தார். அவர் பேசுவதைக் கேட்க அனைவரும் ஆவலாய் இருந்தனர். அவர் பேச ஆரம்பித்தார்: "பூமிக்கடியில் சிக்குண்டிருந்த எங்களை 69 நாட்கள் சென்று மீண்டும் உயிரோடு பூமிக்கு மேல் கொண்டு வந்தது இறைவன் ஆற்றிய ஒரு புதுமையே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இதைப் புதுமையாக எண்ணுகின்றனர்." என்று அவர் தன் உரையைத் துவக்கினார்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை சிலே நாட்டுச் சுரங்கம் ஒன்றில் புதையுண்டு போன 33 தொழிலாளர்களில் ஒருவர் Jose Henriquez. அவர் தொடர்ந்து பேசியபோது, சுரங்கத்தில் புதையுண்ட 33 பெரும் அந்த 69 நாட்களில் அடைந்த அழகான, அற்புதமான மாற்றங்களை எடுத்துக் கூறினார். கடவுள் மேல், தங்கள் மேல், தங்கள் மனைவியர் மேல் நம்பிக்கையின்றி, சந்தேகக் கண்களுடன், சந்தேக மனதுடன் வாழ்ந்த பலர் இந்த அனுபவத்திற்குப் பின் பெரும் மாற்றங்கள் அடைந்ததைக் கூறினார்.
புதையுண்ட 33 தொழிலாளர்களை வெளிக்கொணர சிலே அரசு அறிவியல் உதவியுடன் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஒவ்வொரு முறையும் அறிவியல் முயற்சிகள் தோற்றபோது, சுரங்கத்தில் சிக்குண்டிருந்த தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் தங்கள் விசுவாசத்தை இழக்காமல் செபித்தனர். அதிலும் முதல் 17 நாட்கள் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் அவர்கள் ஆரம்பித்த அந்த நம்பிக்கைப் பயணத்தைப் பற்றி Jose Henriquez அற்புதமாக விவரித்தார். அறிவியல் அடிப்படையில் மட்டும் இந்த நிகழ்வை அணுகியிருந்தால், இந்த 33 தொழிலாளர்கள் உடல் நலம் மட்டுமின்றி, மன நலத்தோடும் அந்தப் புதை நரகத்தில் இருந்து மீண்டு வந்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக் குறியே.
தன் உரையின் இறுதியில் Jose Henriquez சொன்ன வார்த்தைகள் இவை: "நான் உங்கள் முன் இப்போது உயிரோடு நிற்பதற்கு ஒரே ஓர் காரணமே உண்டு. என்னுடைய கடவுள், வாழும் கடவுள்; என்னை வாழ்விக்கும் கடவுள். இந்தக் கடவுளைக் கண்டுபிடிக்க, இந்தக் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ள உங்கள் வாழ்வில் விபத்துக்கள் நிகழும் வரை காத்திருக்காதீர்கள்." என்று இவர் தன் உரையை முடித்தார்.

முற்றிலும் மூடப்பட்டு, இனி வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் கிடைக்காது, இனி உயிரோடு மீள மாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்தனர் சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள். இயேசுவின் பாடுகளுக்குப் பின், அந்தக் கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், இயேசுவின் சீடர்களும் இதே நிலையில் தங்களை மூடிய கதவுகளுக்குப் பின் பூட்டி வைத்திருந்தனர். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட சீடர்கள் அச்சமின்றி, சந்தேகம் ஏதுமின்றி இயேசுவை உலகறியச் செய்தது போல், இந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகளும் வெளியே வந்த பின் பல ஊர்களுக்கு, பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்து வருகின்றனர். "அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால் எங்களுடன் 34வது பேராக, இறைவன் எப்போதும் உடன் இருந்தார்." என்று இவர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு இயேசு கூறிய பதில்: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 21: 27-29) இந்தச் சொற்களை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி வாழாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு."
அறிவைக் கடந்த இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கம் சந்தேகப் புயல்களை அடக்கும்; சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.