2011-04-30 15:47:16

இந்திய அணுமின்நிலையத் திட்டத்தை நிறுத்துவதற்குத் தலத்திருச்சபைத் தலைவர்கள் போராட்டம்


ஏப்ரல்30,2011. இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உலகிலே மிகப்பெரிய அணுமின் நிலையம் உட்பட அம்மாநிலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு அணுமின் நிலையத் திட்டங்களுக்கு எதிராக அம்மாநிலத் திருச்சபைத் தலைவர்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைய்ந் நாட்டு செர்னோபில் அணுமின் நிலையப் பேரிடரோ அல்லது ஜப்பானின் ஃபுக்குஷிமா நெருக்கடியோ இந்தியாவில் நடப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்று Sindhudurg ஆயர் Alwyn Barreto ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அரசின் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கல்வி வழங்குவதற்கு மறைமாவட்ட சமூகநலப்பணி மையம் கூட்டங்களை நடத்தி வருகின்றது என்று ஆயர் ஆல்வின் மேலும் கூறினார்.
இரத்னகிரி மாவட்டத்தின் Madban கிராமத்தில் ஆயிரம் கோடி டாலர் செலவில் 9,900 மேகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கென ஆறு மின்உலைகள் கொண்ட அணுமின் நிலையம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தொடங்கும் முன்னர் அது குறித்தத் தனிப்பட்ட பரிசீலனைக் குழுவை அமைக்கும் மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.
இந்த அணுமின் நிலையமானது 120 மைல் நீளம் கொண்ட அரபிக் கடல் பகுதியில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பல அணுமின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் அமைந்துள்ள Tarapur ல் கடந்த ஞாயிறன்று எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன







All the contents on this site are copyrighted ©.