2011-04-29 15:29:30

லிபியா மீதான நேட்டோ போர் அர்த்தமற்றது, இத்தாலிய அரசு பதவி விலக வேண்டும் – டிரிப்போலி ஆயர் மார்த்தினெல்லி


ஏப்ரல்29,2011. லிபியாவில் நேட்டோ கூட்டமைப்புப் படைகள் நடத்தும் போர் அறிவற்றதாக இருக்கின்றது, மக்கள் அமைதியை விரும்புகின்றனர், இத்தகைய போருக்கு அப்பாவி மக்கள் செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்ஸோ மார்த்தினெல்லி.
கடந்த இரவு முழுவதும் டிரிப்போலியில் குணடுவீச்சுகள் நடத்தப்பட்டன, அப்பாவி மக்கள் செய்வதறியாது தெருக்களில் இங்குமங்கும் ஓடுகின்றனர், இந்தப் போரை நிறுத்துவதற்குத் திருத்தந்தை அழைப்பு விடுக்க வேண்டும் என்றுரைத்த ஆயர், இந்தப் போர் தொடர்ந்து இடம் பெற்றால் லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகி, எதிர்பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
குண்டுகள் எதற்கும் தீர்வு சொல்லாது, இந்தப் போர் அர்த்தமற்றது, நேட்டோவும் புரட்சிக் குழுவினரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தி லிபிய அரசோடு தூதரக அளவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் ஆயர் கேட்டுக் கொண்டார்.
பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் அழுது கொண்டு ஓடுவதைக் காண முடிகின்றது, பல முஸ்லீம் பெண்கள் ஆலயத்துக்கு வந்து போரை நிறுத்துவதற்குத் திருத்தந்தையிடம் கூறுமாறு தன்னிடம் கேட்பதாக ஆயர் மார்த்தினெல்லி தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.