2011-04-29 15:23:11

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் நிகழ்வையொட்டி புனித பூமியில் சிறப்புக் கொண்டாட்டங்கள்


ஏப்ரல்29,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், விசுவாச மனிதர், பற்றுறுதி, உரையாடல், அமைதி ஆகியவற்றை ஊக்குவித்தவர், சாட்சிய மனிதர், துன்புறும் மனிதர் என்றவாறெல்லாம் புகழ்ந்து பத்து நாட்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் புனித பூமி கத்தோலிக்க ஆயர்கள்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களை அருளாளர் என்று அறிவிக்கும் திருவழிபாடு வத்திக்கானில் மே 1, இஞ்ஞாயிறன்று நடைபெறுவதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று பத்து நாட்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ள புனித பூமி ஆயர்கள், அவற்றை வருகிற மே 8ம் தேதி நிறைவு செய்வர்.
இத்தகைய விசுவாச மனிதரை, சாட்சிய வாழ்வு வாழ்ந்த மனிதரைப் புனித பூமியில் சந்தித்து அவரது உரைகளைக் கேட்ட நாம் அவரது அருளாளர் திருப்பட்ட விழாவைக் கொண்டாடாமல் இருக்க முடியாது என்று புனித பூமிக் கிறிஸ்தவர்களுக்கு ஆயர்கள் எழுதிய மேய்ப்புப்பணி மடல் கூறுகிறது.
இச்சனிக்கிழமை மாலை ஜோர்டனில் இடம் பெறும் இளையோர் கூட்டம் உட்பட இசைக்கச்சேரிகள், திருப்பலி, அன்னைமரியா வழிபாடு என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், பாலஸ்தீனப் பிரதமர் சாலம் ஃபாயாட் பெத்லகேமில் உள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மையத்தில் இடம் பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.







All the contents on this site are copyrighted ©.