2011-04-29 15:24:21

கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் 79 திருத்தந்தையர் புனிதர்கள்


ஏப்ரல்29,2011. இஞ்ஞாயிறன்று அருளாளர் என அறிவிக்கப்படவிருக்கும் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், கத்தோலிக்கத் திருச்சபையில் கடந்த 300 ஆண்டுகளில் அருளாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திருத்தந்தையருள் 11வது திருத்தந்தையாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் புள்ளி விபரங்களின்படி 1712ம் ஆண்டிலிருந்து இதுவரை திருத்தந்தையர் ஐந்தாம் பத்திநாதர்(1712), பத்தாம் பத்திநாதர் (1954) ஆகிய இருவரும் புனிதர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உட்பட 11 திருத்தந்தையர் இதுவரை அருளாளர் நிலைக்கும் 79 திருத்தந்தையர் புனிதர் நிலைக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் பாப்பிறை இரண்டாம் ஜான் பால், திருத்தந்தையர் 9ம் பத்திநாதரையும் 23ம் ஜானையும் அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
திருத்தந்தையர் பத்தாம் கிரகரி(1713), 11ம் பெனடிக்ட் ( 1736), 5ம் உர்பான் (1870), 3ம் யூஜின்(1872), 2ம் உர்பான்(1881), 3ம் விக்டர் (1887), 5ம் இன்னோசென்ட் (1898), 11ம் இன்னோசென்ட்(1956) ஆகியோர் அருளாளர்கள் ஆவர்.
மேலும், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் தாய்நாடான போலந்திலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மக்கள், இஞ்ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் சிலர் தபமுயற்சியாக, போலந்திலிருந்து உரோமைக்குக் கால்நடையாக வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.