2011-04-28 15:57:20

8. தோற்று நோயற்ற பிற நோய்களால் 3,61,00000 மக்கள் இறந்துள்ளனர் - ஐ.நா.அறிக்கை


ஏப்ரல் 28,2011. இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், நீரழிவு நோய் ஆகிய தொற்று நோயற்ற பிற காரணங்களால் 2008ம் ஆண்டு 3,61,00000 மக்கள் இறந்துள்ளனர் என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
"தொற்று நோயற்ற பிற நோய்களின் அதிகரிப்பு, ஒரு பெரும் சவால்" என்ற தலைப்பில் இரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் சார்பில் இவ்வியாழன் துவக்கப்பட்ட ஒரு கருத்தரங்கில் இவ்வறிக்கை வெளியானது.
இதய நோய், புற்று நோய் ஆகியவைகள் பெரும்பாலும் நடுத்தர வருவாயுள்ள அல்லது, அதற்கும் கீழான வருவாய் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தோற்று நோயற்ற இவ்வியாதிகளில் இதய நோய் மிக அதிகமான மக்களைக் கொல்கிறதென்றும் அதற்கு அடுத்தபடியாக புற்று நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய் ஆகியவை அதிக மக்களின் உயிர்களைப் பறிக்கிறதென்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
புகையிலை பயன்பாடு, மது பானம் அருந்துதல், தவறான உணவு வகைகள், மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை இந்நோய்களை அதிகப்படுத்தும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மாஸ்கோவில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள 300க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.