2011-04-27 16:39:29

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 27, 2011. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைவுற்றுள்ள போதிலும் உரோம் நகரில் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டுதான் இருக்கின்றது. வரும் ஞாயிறன்று முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கெனவும் பல நாடுகளிலிருந்து, குறிப்பாக அத்திருத்தந்தையின் தாய் நாடான போலந்திலிருந்து திருப்பயணிகள் வந்து கொண்டிருப்பதால், உரோம் நகரமே ஒரு பெரிய விழாக்கொண்டாட்டத்திற்கான தயாரிப்பில் உள்ளது. இத்தகைய ஒரு சூழலில் உரோம் புனித பேதுரு பேராலய வளாகம் வழக்கத்தைவிட பெருமளவான திருப்பயணிகளால் நிரம்பி வழிய, திருத்தந்தையும் உயிர்ப்பு காலம் குறித்த தன் கருத்துக்களை வழங்கினார்.
RealAudioMP3 உயிர்ப்புத் திருவிழாவின் இந்த முதல் நாட்களில் திருச்சபை, நமக்கும் நம் உலகிற்கும் புதியதோர் வாழ்வைக் கொணர்ந்த இயேசுவின் உயிர்ப்பு குறித்து களிகூர்கின்றது. இவ்வுலகு சார்ந்தவைகளை மரணத்தில் தள்ளி, தந்தையின் வலப்பக்கம் இயேசு அமர்ந்திருக்கும் மேலுலகு சார்ந்தவற்றை நாடுவதன் மூலம், இந்தப் புதிய வாழ்வை அனைவருக்கும் தெரியும்படியானதாக ஆக்குமாறு புனித பவுல் தன் திருமுகத்தில் கூறியுள்ளார் (கொலோ 3:1-2). திருமுழுக்கில் கிறிஸ்துவை அணிந்துள்ள நாம், அவர் நமக்கு கற்றுத்தந்த நற்பண்புகளில், குறிப்பாக, அனைவரையும் முழுமையான இணக்க வாழ்வில் ஒன்றிணைக்கும் பிறரன்பில் தினந்தோறும் புதுப்பிக்கப்பட அழைப்பு பெறுகிறோம். இந்த புதிய வாழ்வை வாழ்வதன் வழி நாம் உள்மன அளவில் மட்டும் மாற்றம் காண்பதில்லை, மாறாக நம்மைச் சுற்றியுள்ள உலகையும் மாற்றுகிறோம்.
எந்த ஒரு தடைச்சுவரையும் உடைத்து, அனைவரின் மாண்பிற்கான மதிப்பு, நன்மைத்தனம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய ஒரு புதிய உலகைக் கட்டியெழுப்ப வல்ல ஆன்மீக விடுதலையைக் கொணர்வது பிறரன்பே. எனவே, நாம் இவ்வுலகில் ஒப்புரவு, நீதி, மற்றும் வாழ்வின் புளிக்காரமாக மாறும்வண்ணம் விசுவாசத்தில் என்றென்றும் புதியதாக பெறும் கொடை, இயேசுவின் உயிர்ப்பாகும். RealAudioMP3 உயிர்த்த இயேசுவில் விசுவாசம் கொண்டுள்ள நமக்குத் தரப்பட்டுள்ள பணி என்னவெனில், ஏமாற்றத்தின் சூழல்களில் நம்பிக்கையைத் தட்டி எழுப்புவதும், கவலையின் இடங்களில் மகிழ்ச்சியைக் கொணர்வதும், மரணத்தின் இடத்தில் வாழ்வைக் கொணர்வதுமாகும். கிறிஸ்துவோடு இணைந்து, கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவில் அனைத்தையும் புதியதாக்க முயல்வோம் நாம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.