2011-04-26 15:21:51

திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி


'உம் உயிர்ப்பில் கிறிஸ்துவே, வானமும் வையமும் களிகூர்வதாக.’
உரோம் மற்றும் உலகம் முழுமையும் உள்ள சகோதர சகோதரிகளே!
உயிர்ப்பு நாள் நமக்குக் கொணரும் செய்தி தொன்மையானது, ஆனால் என்றென்றும் புதியது: கிறிஸ்து உயிர்த்துவிட்டார்.
இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால் யெருசலேமிலிருந்து வந்த இந்த நிகழ்வு இன்றும் திருச்சபையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதன் இதய ஆழத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது, இயேசுவின் அன்னையாம் மரியா, மரிய மதலேனாள், காலியான கல்லறையைக் கண்ட ஏனைய பெண்கள், பேதுரு மற்றும் ஏனைய சீடர்கள் ஆகியோரின் உயிர்த்துடிப்புடைய விசுவாசமாகும்.
இன்றைய நம் காலம் வரை, நவீனத் தகவல் தொடர்பின் வளர்ச்சியடைந்த இக்காலத்திலும், கிறிஸ்தவர்களின் விசுவாசம், அன்று காலியான கல்லறையின் கல் புரட்டப்பட்டிருப்பதை முதலில் கண்ட சகோதர சகோதரிகளின் மற்றும் சிலுவையில் அறையுண்ட மெசியா உயிர்த்துவிட்டார் என்ற வானதூதரின் செய்தியையும் கேட்டவரின் சாட்சியத்தில் தன் அடிப்படையைக் கொண்டுள்ளது.
ஆண்டவரும் தலைவருமான இயேசு, வாழ்பவரும் தொட்டுணரத்தக்கவருமாக மரிய மதலேனாளுக்கும், எம்மாவுஸ் பாதையில் இரு சீடர்களுக்கும், இறுதியில் எருசலேம் மாடியறையில் கூடியிருந்த பதினொரு சீடர்களுக்கும் தோன்றினார்.
இயேசுவின் உயிர்ப்பு என்பது, ஊகம் அல்லது அறிவு நிலை கடந்த அனுபவத்தின் கனி அன்று.
இந்நிகழ்வானது வரலாற்றைக் கடந்ததாய் இருந்து, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்தது, மற்றும் துடைத்தழிக்க முடியாத ஓர் அடையாளத்தை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளது.
இயேசுவின் கல்லறையைக் காவல் காத்த வீரர்களின் கண்களைக் கூச வைத்த ஒளியானது, காலத்தையும் அண்ட வெளியையும் ஊடுருவிக் கடந்து சென்றது.
இது ஒரு வேறுபட்ட ஒளி, தெய்வீக ஒளி. இது சாவெனும் இருளை ஒதுக்கி வைத்து,
இவ்வுலகிற்கு இறைவனின் சீர்சிறப்பு நிறை மகிமையை, உண்மை மற்றும் நன்மைத்தனத்தின் சீர்சிறப்பைக் கொணர்ந்தது. வசந்த காலத்தில் சூரியக்கதிர்கள், மரக்கிளைகளில் காணும் மொட்டுக்களை வெடிக்கவைத்து திறப்பதுபோல், இயேசுவின் உயிர்ப்பிலிருந்து வரும் ஒளிக்கீற்றானது மனிதனின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும், விருப்பத்திற்கும், திட்டத்திற்கும், அர்த்தத்தையும் பலத்தையும் வழங்குகிறது.
படைப்பின் மௌனமான புகழ்ச்சிப் பாவிற்கு குரல்கொடுக்கும் மனித குலத்தின் வசந்தகாலத்தின் இந்நாளில் அகிலம் முழுவதும் மகிழ்கின்றது. உலகின் வழியே திருப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருச்சபையில் எதிரொலிக்கும் உயிர்ப்பின் அல்லேலூயா வாழ்த்து, இந்த அகிலத்தின் மௌனமான மகிழ்ச்சித் திளைப்பை வெளியிடுகிறது. அனைத்திற்கும் மேலாக, இறைவனுக்கும் தன்னை உண்மையான விதத்தில் திறந்து, அவரின் முடிவற்ற நன்மைத்தனம், அழகு மற்றும் உண்மைக்கு நன்றியுரைக்கும் ஒவ்வொரு மனித ஆன்மாவின் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
'உமது உயிர்ப்பில் கிறிஸ்துவே, வானமும் வையமும் களிகூர்வதாக.'
திருச்சபையின் இதயத்தில் உதிக்கும் இந்தப் புகழ்பாடலுக்கான அழைப்பின் பதிலை வானம் முழுமையாகத் தருகிறது.
வானவர் படை, புனிதர்கள், ஆசீர்பெற்ற ஆன்மாக்கள் ஒரே குரலாய் ஒன்றிணைந்து மகிழ்ச்சிநிறைப் பாடலைப் பாடுகின்றனர்.
வானுலகில் அனைத்தும் அமைதியும் மகிழ்வுமே. ஆனால் உலகிலோ அவ்விதம் இல்லை.
நம்முடைய இந்த உலகில் உயிர்ப்பின் அல்லேலூயா வாழ்த்து, இன்றும் பல்வேறு துன்பநிலைகளிலிருந்து கிளம்பும் அழுகுரல் மற்றும் சோகத்தின் மாறுபட்ட ஒன்றாய் உள்ளது.
அது, இழப்புக்கள், பசி, நோய், போர், வன்முறை ஆகியவைகளின் துன்பநிலை. இருந்தும், இதற்காகவே கிறிஸ்து இறந்து, பின் உயிர்த்தெழுந்தார். பாவத்திற்காக, நம்முடைய பாவத்திற்காகவும் இயேசு உயிர்துறந்தார். அவர் வரலாற்றின் மீட்பிற்காக, நம்முடையதற்கும் சேர்த்தே உயிர்த்தெழுந்தார். ஆகவே, இன்றைய என் செய்தி அனைவருக்குமானது. மற்றும், இறைவாக்குப் போன்ற பொது அறிவிப்பான இது, குறிப்பாக, துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்கும், சமூகங்களுக்கும், உயிர்த்த கிறிஸ்து, விடுதலையின், நீதியின், அமைதியின் பாதையைத் திறந்து வைப்பார் என்ற செய்தியைக் கொணர்கிறது.
இறைவனின் ஒளியில் முதலில் நிறைந்திருந்த அந்தப் புனித பூமி களிகூர்வதாக.
இயேசுவின் சீர்சிறப்புநிறை மகிமை, மத்தியக்கிழக்குப் பகுதியின் மக்களைச் சென்றடைந்து, அமைதி மற்றும் மனித மாண்பின் ஒளி, பிரிவினை, பகைமை, வன்முறை எனும் இருளை மேற்கொள்வதாக.
தற்போதைய லிபிய மோதலில் அரசியல் செயல்நயம் மற்றும் பேச்சுவார்த்தைகள், ஆயுதங்களின் இடத்தை எடுப்பதாக. மோதல்களின் காரணமாகத் துன்புறுவோர், மனிதாபிமான உதவிகளைப்பெற வழி கிட்டுவதாக.
வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியகிழக்குப் பகுதியின் குடிமக்களனைவரும், குறிப்பாக இளையோர், பொது நலனுக்காக உழைப்பார்களாக.
ஏழ்மையை தோல்வியுறச் செய்வதாகவும் மற்றும் மனிதனுக்கான மதிப்பால் தூண்டப்பட்டதாகவும் ஒவ்வோர் அரசியல் முடிவையும் எடுக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவார்களாக.
மோதல்களால் வெளியேறும் மக்களுக்கான உதவிகள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருவதாக. தங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருப்பவைகளை விட்டுச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள பல ஆப்ரிக்க நாடுகளின் அகதிகளுக்கும் உதவி கிட்டுவதாக.
நல்மனதுடையோர் தங்கள் இதயங்களைத் திறக்கட்டும். அதன்வழி, நம் எண்ணற்ற சகோதர சகோதரிகளின் உடனடித் தேவைகள், ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய ஒன்றிணைந்த பதில்மொழியால் நிறைவேற்றப்படட்டும்.
நம் ஆறுதலின் மற்றும் பாராட்டின் வார்த்தைகள், இத்தகைய தாராளப் பணிகளில் ஈடுபட்டு சாட்சிய எடுத்துக்காட்டாய் விளங்கும் மக்களைச் சென்றடைவதாக.
அமைதியான ஒன்றிணைந்த வாழ்வு ஐவரி கோஸ்ட் மக்களுக்கு மீண்டும் பெற்றுத்தரப்படுவதாக. இந்நாட்டில் ஒப்புரவு மற்றும் மன்னிப்பின் பாதையில் நடைபோடவேண்டிய அவசரத்தேவை உள்ளது. இதன்வழியேதான் அண்மை வன்முறைகளின் ஆழமான காயங்களைக் குணப்படுத்த இயலும்.
அண்மை நிலநடுக்கத்தின் துயர விளைவுகளை எதிர்நோக்கும் ஜப்பான், ஆறுதலையும் நம்பிக்கையையும் கண்டு கொள்வதாக.
இது போன்று அண்மை மாதங்களில் இயற்கைப் பேரிடர்களால் வேதனைகளையும் கடுந்துயரையும் அனுபவித்த ஏனைய நாடுகளும் ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவதாக.
இயேசு கிறிஸ்துவிலான விசுவாசத்திற்காக எதிர்ப்பையும், ஏன் சித்ரவதைகளைக்கூட அனுபவிக்கும் மக்களின் சாட்சியம் குறித்து வானமும் வையமும் மகிழ்வதாக.
இயேசுவின் வெற்றிவாகை சூடிய உயிர்ப்பின் மகிழ்ச்சிநிறை செய்தி அவர்களின் நெஞ்சுறுதியையும் இறைநம்பிக்கையையும் ஆழப்படுத்துவதாக.
அன்புச் சகோதர சகோதரிகளே !
உயிர்த்த கிறிஸ்து நமக்கு முன்னே புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் நோக்கிப் பயணம் செய்கிறார். அங்கு நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒரே தந்தையின் குழந்தைகளாக வாழ்வோம்.
கிறிஸ்து அங்கு, உலக முடிவுவரை நம்மோடு இருப்பார்.
இந்தக் காயமுற்ற உலகில், அல்லேலூயா வாழ்த்துப் பாடி அவர் பின்னே நாம் நடப்போம், வாருங்கள்.
நம் இதயங்களில் மகிழ்வும், வருத்தங்களும், நம் முகங்களில் புன்னகையும் கண்ணீரும் உள்ளன.
அதுவே நம் இவ்வுலகின் உண்மை நிலை.
ஆனால் கிறிஸ்து உயிர்த்துவிட்டார், அவர் உயிரோடு உள்ளார், நம்மோடு நடந்து வருகிறார்.
இதற்காகவே நாம் பாடுகிறோம், நடைபோடுகிறோம். இவ்வுலகில் நமக்கான பணிகளை பிரமாணிக்கமாய் ஏற்று நடத்தி, நம் பார்வையை வானுலகின் மீது பதித்தவர்களாய் நடக்கிறோம்.
உங்களனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.








All the contents on this site are copyrighted ©.