2011-04-26 15:07:09

செர்னோபில் அணு விபத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம், சமய மற்றும் நாடுகளின் தலைவர்கள் செய்திகள்


ஏப்ரல் 26,2011: உலகையே அச்சுறுத்திய மிக மோசமான செர்னோபில் அணுஉலை விபத்தின் 25ம் ஆண்டு, ஏப்ரல் 26ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்ட வேளை, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் கிரில், இரஷ்ய புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தி அத்தினத்தை நினைவு கூர்ந்தார்.
உக்ரைன் நாடு முனனாள் சோவியத் யூனியோடு சேர்ந்திருந்த சமயம் உக்ரைய்னின் செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது உலை, 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி காலை 1 மணி 23 நிமிடம் ஆன போது வெடித்தது. இதில் உடனடியாக சுமார் முப்பது பேர் இறந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறி மேற்கு இரஷ்யாவிலும் பெலாருசிலும் தஞ்சம் தேடினர். இன்றும் அந்த அணுமின் நிலையத்திற்கு முப்பது கிலோ மீட்டர் தூரம் யாரும் செல்லக்கூடாத பகுதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடையாத நிலையில் இந்தச் செர்னோபில் அணுஉலை விபத்தின் 25ம் ஆண்டு நினைவு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்தச் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டவுடன் அதனைச் சுத்தம் செய்யவும் அதைச் சுற்றியிருந்த கிராமத்தினரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்ட சுமார் எட்டு இலட்சம் பேரை இந்த நினைவுத் திருப்பலியில் நினைவுகூர்ந்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலைவர் கிரில், பிறருக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் கொடையை இந்த மனிதர்கள் கடவுளுக்கு அளித்துள்ளார்கள் என்றார்.
இந்த ஏப்ரல் 26ம் தேதி செர்னோபில் விபத்து மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைப் போன்ற 500 குண்டுகளின் அழிவு சக்திக்குச் சமம் என்றும் இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் தலைவர் கூறினார்.
இந்தத் துப்புரவுப் பணியில் தப்பிப் பிழைத்த 700 பேர், உக்ரைய்ன் பிரதமர் Mykola Azarov உட்பட இந்தச் செர்னோபில் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மெழுகுதிரிகளை ஏற்றினர்.
மேலும், இந்தத் துப்புரவுப் பணியில் மொத்தம் எட்டு இலட்சத்து 29 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர், இவர்களில் 3 இலட்சத்து 56 ஆயிரம் பேர் உக்ரைய்னைச் சேர்ந்தவர்கள், இவர்களில் இரண்டு இலட்சத்து 19 ஆயிரம் பேர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர் என்று உக்ரைய்ன் செர்னோபில் கழகத் தலைவர் Yuri Andreev தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.