2011-04-26 15:02:01

உரோம் புனித பவுல் பசிலிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள ஜிப்சிகளைச் சந்தித்தார் திருத்தந்தையின் பிரதிநிதி


ஏப்ரல் 26,2011: ஜிப்சிகள் எனப்படும் நாடோடி இன மக்கள் வாழ்ந்த முகாம்கள் உரோம் மாநகர அதிகாரிகளால் அகற்றப்பட்ட பின்னர் புனித பவுல் பசிலிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள அம்மக்கள் மீதான தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தனது இந்தக் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாக, வத்திக்கான் நாட்டுச் செயலகத்தில் பொது விவகாரப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பேராயர் Fernando Filoni யை திருத்தந்தை அங்கு அனுப்பினார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
இப்புனித வாரத்தில் உரோம் மாநகர அதிகாரிகள் இந்த ஜிப்சிகளின் நான்கு முகாம்களை அகற்றியதையொட்டி சுமார் ஆயிரம் ஜிப்சிகள் புலம் பெயர்ந்துள்ளனர், இவர்களில் ஏறக்குறைய நூறு ஜிப்சிகள் புனித வெள்ளியன்று புனித பவுல் பசிலிக்காவிலும் அதன் முன்பகுதி வளாகத்திலும் நுழைந்தனர் என்று உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் கூறியது.
வத்திக்கானின் நடவடிக்கைகள் எப்போதும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் வத்திக்கான் அதிகாரிகள் உரோம் மாநகர அதிகாரிகள் மற்றும் காரித்தாசுடன் இவ்விவகாரம் குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.