2011-04-25 14:38:51

திருத்தந்தை : இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் கிறிஸ்தவம் தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது


ஏப்ரல்25,2011. நம் ஆண்டவரின் உயிர்ப்பு, நமது மனித நிலைமையின் புதுப்பித்தலின் அடையாளமாக இருக்கின்றது என்று தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நிகழ்வுகளை நிறைவு செய்து பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்திருக்கின்ற காஸ்தெல் கன்டோல்போவுக்குச் சிலநாட்கள் ஓய்வெடுக்கச் சென்றுள்ள திருத்தந்தை, அங்கு இத்திங்கள் நண்பகலில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார்.
நம் பாவங்களுக்காக இறந்த கிறிஸ்து அதன்மீது வெற்றி கண்டார் மற்றும் அழியாத வாழ்வை நமக்குக் கொண்டு வந்தார் என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வு வழியாகத் திருச்சபை மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கிறிஸ்து முழுவாழ்வு வழங்கினார் என்றும் கூறினார்.
கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ள விசுவாசத்தின் அடையாளப் பண்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ‘கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்’ என்று நாம் சொல்வது விசுவாசத்தை அறி்க்கையிடுவதாகவும், கிறிஸ்தவ வாழ்வின் பணியைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.
அன்னைமரியா, மரிய மதலேனாள் மற்றும் திருத்தூதர்கள் போல நாமும் உயிர்த்த கிறிஸ்துவை நம் இதயங்களிலும் வாழ்க்கையிலும் வரவேற்போம் என்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருப்பயணிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.