2011-04-22 14:08:20

திருத்தந்தை : கடவுளின் அன்பு மற்றும் ஞானத்திற்கானத் தாகம் ஒருபோதும் நிறுத்தப்பட்டுவிடக் கூடாது


ஏப்ரல்22, 2011. கடவுளைத் தேடும் முயற்சியை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது மற்றும் அவரது அன்பையும் ஞானத்தையும் பெறுவதற்கு எப்பொழுதும் திறந்த மனதாய் இருப்பதையும் விட்டுவிடக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியை நிகழ்த்திய போது ஆற்றிய மறையுரையில் கடவுளை அதிகமதிகமாக அறிந்து அவரை அன்பு செய்வதற்கான நமது பயணம் நம்மில் நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்றும் திருத்தந்தை கூறினார்.
திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம், நோயில்பூசுதல் ஆகிய திருவருட்சாதனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களை இத்திருப்பலியில் மந்திரித்தார் திருத்தந்தை. இந்த எண்ணெய்களைக் கொண்டிருந்த கலைவண்ணம் மிகுந்த அழகான பெரிய வெள்ளி ஜாடிகளைத் தியாக்கோன்கள், இளையோர் போன்றோர் தூக்கி வந்தனர்.
இறையரசையும் அவரது முடிவில்லாத நன்மைத்தனத்தையும் அறிவிப்பதன் மூலம் இதயங்கள் குணப்படுத்தப்படுகின்றன என்றும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒருவருக்கு கடவுளோடு உள்ள உறவு பாதிக்கப்பட்டால் மற்ற அனைத்துமே பாதிக்கப்படும், எனவே உடலிலும் மனத்திலும் உண்மையிலேயே அவரால் குணம் பெற முடியாது என்றும் உரைத்தார்.
திருச்சபையின் மிக முக்கிய குணப்படுத்தும் பணியானது மக்களைக் கடவுளோடு ஒப்புரவு அடையச் செய்வதன் வழியாக அவர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் குணப்படுத்துவதாகும் என்றும் நோயாளிகளுடன் இருந்து அவர்களைப் பராமரிப்பதும் முக்கிய அழைப்பாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
புனித வின்சென்ட் தெ பவுல், கல்கத்தா அருளாளர் அன்னை தெரேசா போன்றோரின் வழிமுறைகளைப் பின்பற்றி நோயாளிகளைப் பராமரித்து வரும் எல்லாருக்கும் தனது நன்றியையும் திருத்தந்தை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.