2011-04-21 11:55:23

புனித வியாழன் சிறப்பு செய்தி


புனித வியாழன் சிறப்பு செய்தி வழங்குபவர் அருள்திரு இராஜேந்திர சேகர், கும்பகோணம் மறைமாவட்டம்.
RealAudioMP3 அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே! உங்கள் அனைவரையும் வத்திக்கான் வானொலி நிலையம் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களினால் இன்று பெரிய வியாழன் திருச்சடங்கு அனுசரிக்கப்படுகிறது என்பதை நான் நினைப்பூட்ட தேவையில்லை. இத்திருச்சடங்கில் இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை விருந்து, நற்கருணைப் பவனி-இடமாற்றம் இவை யாவும் மையப்படுத்தப்படுகின்றன. இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்திய வியாழன் அன்று தம்மையே கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம் வடிவில் அடையாள முறையில் உணவாகவும், இரத்தமாகவும் தம் சீடர்களுக்கு அளித்து 'இதை என் நினைவாக செய்யுங்கள்' என்று கூறியதைத்தான் இன்று நாம் திருப்பலியாகக் கொண்டாடுகிறோம். இந்நாள் அனைத்துக் குருக்களுக்கும் விழாவாக அமைகிறது ஏனெனில் நற்கருணை ஏற்படுத்தப்பட்டு அதனூடாக குருத்துவம் பிறந்த நாள் இந்நாள்.
ஒவ்வொரு திருப்பலியிலும் நற்கருணைக் கொண்டாட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது. நற்கருணை என்பது அருள் வாழ்வின் அடையாளம், வாழ்வின் மையம், அன்பின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.
நாம் நம் அன்பை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்திருக்கிறோம் அல்லது பெற்றிருக்கிறோம். அதே போல இறைவனின் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் பாவத்தை நீக்க பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவக் கழுவாய்ப் பலிகள் உண்டு. அந்தப் பாவ பரிகாரப் பலியைச் செலுத்தி இறைவனின் இரக்கத்தைப் பெற்றார்கள் இஸ்ராயேல் மக்கள்.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசுவே உயிருள்ள பாவப்பலியாக உலக மாந்தர் அனைவருக்காகவும் பலியானார். அவரே பலியாகவும் பலிப்பொருளாகவும் மாறினார். இந்தப் பலிதான் தினம் தினம் திருப்பலியாகத் திருவழிபாட்டு வேளையில் நிறைவேற்றப்படுகிறது. இதுவே நற்கருணைக் கொண்டாட்டம்.
தூய ஆவியின் வல்லமையால் திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் வெண்ணிறக் கோதுமை அப்பம் இயேசுவின் உடலாகவும், திராட்சை பழ இரசம் இயேசுவின் இரத்தமாகவும் மாறுகிறது. இயேசு அன்று சொன்ன அதே வார்த்தைகளை அவரின் மறுகிறிஸ்துவாக விளங்கும் குருக்களால் இவ்வார்த்தைகள் ஒவ்வொரு திருப்பலியிலும் சொல்லப்படுகின்றன. 'அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ஏனெனில் உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்' என்றார். மேலும் திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி தம் சீடர்களுக்கு அளித்து கூறியதாவது: 'அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது பாவ மன்னிப்புக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும் இதை என் நினைவாகச் செய்யுங்கள்' (மத் 26 28).
இப்படி பாவ மன்னிப்பிற்காகவும், பாவப் பரிகாரத்திற்காகவும் அவர் தன் உடல் - இரத்தம் வழியாக மீட்பளித்து மனுக்குலத்தை தன் பிள்ளைகளாக்க, புனித வாழ்வு வாழ நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கிறார்.
இவ்வாறு உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் மானுடத்தை மீட்கவும், அவர்களைத் தம்மோடு இணைக்கவும்; தன் ஒரே மகனை அனுப்பியதில் இறைத்தந்தையின் அன்பை நாம் உணரலாம். அந்த இறைத்தந்தையின் அன்பை இயேசு தம் வாழ்வாலும், வார்த்தையாலும், நற்செயல்களாலும் காணக்கூடிய வகையில், உணரக்கூடிய வகையில், புரியக்கூடிய வகையில் வெளிப்படுத்தினார். இயேசுவின் உச்சக்கட்ட அன்புச் சிலுவையிலே மூன்று ஆணிகளுக்குள் சிக்கிப் பலியானது. இப்படி உயிரைக் கையளித்து உலகை மீட்க வந்த இயேசு நம்மைத் தனியாக விட்டுவிடவில்லை. நம்மோடு இருக்க நற்கருணையை ஏற்படுத்தி 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
இயேசு ஒருவரே சொன்னதைச் செய்தவரும், செய்ததைச் சொன்னவராகவும் திகழ்கின்றார். 'உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' என்று சொன்னவர் இறுதியில் அன்பின் சின்னமாக, தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தி தம் உடனிருப்பை நமக்குத் தந்திருக்கிறார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற ஒரு புனிதமான நிகழ்ச்சியாகும்.
இப்புனிதமான நிகழ்ச்சியின் ஆணிவேர்தான் நற்கருணை – திருப்பலிக் கொண்டாட்டம், குருத்துவம். எதற்காக? மனிதம் மலரவேண்டும், மானுடம் வாழ வேண்டும் என்பதற்காக. இந்நிகழ்ச்சி மூலம் அவர் முன் வைக்கும் கருத்து இதுதான். 'நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்'. அந்த முன்மாதிரி அன்பின் முதிர்ச்சி. அந்த அன்பின் முதிச்சி நமது வாழ்விலும் மிளிரவேண்டும். கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்த இயேசு அதற்குத் தாழ்ச்சி வேண்டும், பணிவு வேண்டும் என்பதைச் செயல்படுத்திக்காட்ட தாமே முன்னுதாரணமாக அன்று சீடர்களின் பாதங்களைக் கழுவி பாடம் கற்பித்தார். இந்நிகழ்வில் இயேசுவின் பகிர்தலையும் பார்க்கிறோம், இயேசுவின் பணிவையும் பார்க்கிறோம்;, இயேசுவின் பாசத்தையும் பார்க்கிறோம்.
இரவுணவு நிகழ்விலே இயேசு தம் சீடரின் பாதங்களைக் கழுவுகிறார். தன்னையே தாழ்த்திக் கொள்கிறார். நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்ச்சியை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை, நமது ஆளுமையை, பணத்தை, செல்வாக்கை, நன்மதிப்பைக் காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக் கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்குப் பணிவிடை செய்யக் கூடிய மனத் தாழ்ச்சியையும், பகிர்ந்து வாழும் பக்குவத்தையும் இறைமகன் இயேசுவிடம் வேண்டி நிற்போம்.
இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இரவுணவு வேளையில் தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், தாம் கடவுளிடம் திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். இன்று நமது குடும்ப வாழ்விலே குருத்துவ வாழ்விலே ஒப்படைக்கப்பட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க, உயிரோட்டம் கொடுக்க நாம் எடுக்கும் முயற்சி என்ன? இன்று எத்தனையோ குடும்பங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனாதைகளாக்குவதும், வளர்ந்த பிள்ளைகள் பெற்றோர்களை அனாதை இல்லங்களில் தள்ளிவிடுவதும், அனுப்புவதும் கண்கூடாக நாம் பார்க்கின்ற ஒன்று.
கடந்த பி;ப்ரவரி மாதம், 2011 ஆண்டு தினமலர் நாளிதழில் வெளியான செய்தி நெஞ்சை நெகிழ வைத்தது. 'தோளில் சுமந்து, சீராட்டி, தாலாட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப்போனதால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி தவிக்கிறார் கமலா' என்ற தடித்த எழுத்துக்களுக்கு கீழே போனேன். அந்த மூதாட்டிக்கு வயது 86. இவரது மகன் மாரியப்பன். இவர் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார் என்றும் இவரது மனைவி லதா என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வயதான மூதாட்டி தன் ஒரே மகன் மாரியப்பனின் வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார். இவருக்கு பணிவிடைகள் செய்ய மனமில்லாத மகன்-மருமகள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழகர்கோயிலுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் இறக்கி விட்டு விட்டு டிக்கெட் வாங்கி வருகிறோம் எனக் கூறிச் சென்றவர்கள் திரும்ப வரவில்லை. மாலை வரை அனாதையாகத் தவித்த அவரை, கோயில் ஊழியர்கள் சிலர் குப்பை அள்ளும் டிரைசைக்கிளில் வைத்து பஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டடத்தில் போட்டுச் சென்றனர். இந்நிகழ்வும் ஒரு வகையில் மறுதலிப்பு தானே?
இயேசு தம்; சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தபோது, தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், தாம் கடவுளிடம் திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்திருந்த இயேசு, அவர்களைத் தனியாக விட்டுவிடவில்லை, அனாதைகளாக்கிவிடவில்லை. மாறாக என்றும் உங்களோடு இருப்பேன் என்று ஏற்கனவே அவர் சொன்னது போல அவரது பிரசன்னத்தை இன்று நாம் கொண்டாடும் நற்கருணையிலே விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இன்று இந்த மாரியப்பனைப் போல எத்தனையோ ஆரோக்கியசாமிகளும், எத்தனையோ அப்துல்லாக்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளயும், பெற்றோர்களையும் முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் இயேசுவை காட்டிக்கொடுத்தாலும், மறுதலித்தாலும், அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார், வழிநடத்துகின்றார். இறைமகன் இயேசுவின் வாழ்வு நம்மிடம் இருக்கிறதா..? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்...? மறுதலித்திருக்கின்றோம்...? காட்டிக்கொடுத்திருக்கின்றோம், தள்ளிவிட்டிருக்கின்றோம.;..? தவிக்கவிட்டிருக்கிறோம்...? ஒடுக்கியிருக்கின்றோம்...? ஒதுக்கியிருக்கின்றோம்....?;
எதிர்நோக்கியிருக்கும் உயிர்ப்பு பெருவிழாவை உயிரூட்டுவோம். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்றிராமல் சுயஆய்வு செய்வோம். நற்கருணையில் உறைவோம், நன்மையில் திளைப்போம். உயிர்ப்பு பெருவிழா நம்மை உயிர்ப்பிக்கட்டும்.








All the contents on this site are copyrighted ©.