2011-04-20 16:00:48

ஏப்ரல் 21. – வாழ்ந்தவர் வழியில்........,


புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
என்ற வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா?

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.

இது போன்ற எண்ணற்ற, மறக்கமுடியாத வரிகளுக்குச் சொந்தக்காரர், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படும் பாரதிதாசன்.

1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ந்தேதி பாண்டிச்சேரியில் பிறந்து சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பதினெட்டு வயதிலேயே அரசினர் கல்லூரித் தமிழாசிரியரானார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினைத் தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
பாவேந்தர் பாரதிதாசன் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் இயற்கை எய்தினார்.








All the contents on this site are copyrighted ©.