2011-04-19 14:39:06

விவிலியத் தேடல் திருப்பாடல் 31


RealAudioMP3 அது ஒரு தொழுநோயாளர் இல்லம். காலை நேரம். அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் சமைக்க உதவியாக காய் வெட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் விறகு வெட்டிக் கொண்டிருந்தனர். சிலர் பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது என ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திடீரென ஒருவர் கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட அங்கு அவர்களுக்காக பணிசெய்கின்ற அருட்சகோதரியிடம் வந்து நின்றார். எப்படி நிகழ்ந்தது? என்று கேட்ட போது காய் வெட்டிக் கொண்டிருந்த போது விரல்களையும் வெட்டுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் வெட்டி விட்டேன். இரத்தம் சொட்டுகின்ற போது தான் விரல்களை வெட்டி விட்டேன் என்று உணர்ந்தேன் என்று சொன்னார். அந்த அருட்சகோதரி தேவையான மருத்துவத்தை செய்து அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் இன்னொருவர் கால் விரல்களில் இரத்தம் சொட்ட சொட்ட வந்து நின்றார். எப்படி நிகழ்ந்தது? என்று கேட்ட போது விறகு வெட்டிய போது விரல்களை வெட்டுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் வெட்டி விட்டேன். “கால்களில் இரத்தத்தை பார்த்த போது தான் உணர்ந்தேன். விரல்களை வெட்;டி விட்டேன் என்று” என்றார். உடனே அந்த சகோதரி அவருக்குரிய மருத்துவ உதவிகள் செய்த பின் அருகிலிருந்த சிற்றாலயத்திற்குள் சென்று முழந்தாற் படியிட்டு;: “இறைவா தொழுநோயாளிகளான இவர்களுக்கு உணர்வினைத் தா” என்று மன்றாடினார்கள்.
அன்பார்ந்தவர்களே! இது தான் செபம். நம்மையும் அறியாமல் நமது மன அழுத்தங்களையும் வெளித் தள்ளிக் கொண்டு நமது உள்ளாந்த ஏக்கங்களோடு இயல்பாக வெளிபடுவதே செபம். அப்படி ஒரு இயல்பான செபம் தான் நாம் இன்று சிந்திக்கின்ற திருப்பாடல் 31.
இந்த திருப்பாடல் நம் எல்லாருக்குமே நன்கு அறிமுகமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளியன்று நாம் வழிபாட்டில் பயன்படுத்துகின்ற இந்தத் திருப்பாடலைத் தான் பயன்படுத்துகின்றோம். இயேசு சிலுவையிலே தொங்கிய போது சொன்ன “தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைகின்றேன்” என்ற வார்த்தைகளை உள்ளடக்கிய திருப்பாடலைத்தான் நாம் இன்று சிந்திக்க இருக்கின்றோம். திருப்பாடல் ஆய்வாளர்கள் இந்தத் திருப்பாடலை. 1-8 தாவீதின் இறைநம்பிக்கை என்றும் 9-18 இக்கட்டான நேரத்தில் செபம் எனவும் 19-24 இறைபுகழ் எனவும் 3 பகுதிகளாகப் பிரிக்கின்றனர்.
இந்தத் திருப்பாடலை வாசித்து பார்க்கும் போது மனிதனுடைய சாதாரண மனநிலை அப்படியே வெளிப்படுகிறது. மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளில் நொந்து போகிறான். சில சமயங்களில் பிரச்சனைகள் நான்கு பக்கமும் நெருக்குகின்ற போது என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித்திணறிப் போகிறான். அழுது புலம்புகின்றான்.
திபா. 31:9 ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்: துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின.
திபா. 31:10 வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.
இவ்வாறான அவனுடைய கஷ்டங்களை நினைத்துக் கொண்டிருக்கும்போதே இறைவன் தன் வாழ்வில் செய்த மாபெரும் காரியங்களை நினைத்துப் பார்க்கிறான். இறைவன் அவனை பல்வேறு இடர்களிலிருந்து காப்பாற்றியதை நினைவுகூருகின்றான்.
திபா. 31:21 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர்தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார்.
திபா. 31:22 நானோ, கலக்கமுற்ற நிலையில் உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொண்டேன்: ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர்.
இறை பராமரிப்புச் செயல்களை அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கஷ்டங்கள் அவனை அழுத்துகின்றன. உடனே அவனுடைய கஷ்டங்களை நினைவுகூருகின்றான். இவ்வாறு இந்தத் திருப்பாடல் தொடர்கிறது.
இந்தத் திருப்பாடலில் Logic இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமாக நாம் ஒரு கருத்தை கூறிய பிறகுதான் இன்னொரு கருத்தைக் கூறுவோம். ஓன்று இரண்டு என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போவோம். ஆனால் இத்திருப்பாடலில் முதல் பகுதியில் ஆசியர் இறைவன் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைப் பற்றி பேசுகிறார். ஆனால் இரண்டாம் பகுதியில் உடைந்துபோன மட்கலம் போல் ஆனேன். பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது: எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. என்று சொல்கின்றார். அப்படியானால் முதற்பகுதியில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்ன ஆயிற்று என்று தான் நினைக்கத் தூண்டும்.
அன்பார்ந்தவர்களே இங்கு Logicக்கு இடம் இல்லை. எதார்த்தமான மனதிற்கு மட்டும் தான் இடம் உண்டு. மொத்தத்தில் இந்தத் திருப்பாடல் எளிதான ஒரு செபம். மிகப்பெரிய தத்துவங்களையும் இறையியலையும் உள்ளடக்கி அன்றாட எதார்த்த வாழ்விலிருந்து அன்னியப்பட்டு சிந்தித்து சொல்கின்ற செபம் அல்ல. மாறாக எதார்த்தமாக ஒரு குழந்தையைப் போன்று இயல்பாக தன் மனதில் இருப்பதை அப்படியே தன் தந்தையிடம் எடுத்துரைப்பது தான் உண்மையான செபம்.
புத்தகங்களிலிருந்து பல்வேறு செபங்களை வாசிக்கிறோம். அவை நமக்கு செபம் செய்வதற்கு உதவி செய்கின்றன. அவை பொதுவாக சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்டன. நமது வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நாம் தான் நமது வாழ்வின் எதார்த்தங்களிலிருந்து செபங்களை இறைவன்பால் எழுப்ப வேண்டும்.
இயேசுவின் செபங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கைச் சூழல்களிலிருந்து வந்தவை. ஆவை எதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பு தான் என்பதற்கு இதோ உதாரணங்கள்:
மாற். 6:41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து கடவுளைப் போற்றி அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீகளையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.
மாற். 7:34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு> அவரை நோக்கி ;எப்பத்தா ; அதாவது ;திறக்கப்படு ; என்றார்.
நாம் ஒவ்வொரு நாளும் பலமுறை சொல்கின்ற இயேசு கற்றுக் கொடுத்த பரலோகத்தில் இருக்கிற.... அன்றாட உணவு... நாங்கள் பொறுப்பது போல... பொறுத்தருளும். இதை விட எதார்த்தமான செபம் யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது.
என்ன அன்பர்களே! இது தான் செபம் என்றால் நாம் தினமும் அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறதா? நாம் செய்கிறோம்தான் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் திருப்பாடல் ஆசிரியருக்கும் நமக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்கிறது. திருப்பாடல் ஆசிரியரைப் போன்றே நமக்கும் நம் வாழ்வில் பிரச்சனைகள் வரத்தான் செய்கின்றன. ஆதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த பிரச்சனைகளை, கஷ்டங்களை நமது அறிவுத் திறமையால் வென்றுவிட முடியும் என்று நினைத்து விடுகிறோம். கடவுளைப்பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை நம்மால் முடியாத நேரத்தில் தான் கடவுளே என்று விழுகிறோம். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் எல்லாவற்றையும் கடவுளிடம் கொண்டுவந்து விடுகிறார். ஆசிரியரின் வார்த்தைகள் அவர் எழுதுகின்ற மனப்போக்கு தனக்கு எல்லாமே இறைவன் தான் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
திபா. 31:1 ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்: நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்: உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
திபா. 31:3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே
திபா. 31:5 உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்.
நாமும் திருப்பாடல் ஆசிரியரைப் போல நமது முழு நம்பிக்கையும் இறைவன் மேல் வைப்போம். ஆண்டவரே நீரே என் கற்பாறை, நீரே என்கேடயம், நீரே என் கோட்டை, அரண்.








All the contents on this site are copyrighted ©.