2011-04-19 14:23:46

2011 ஜூன் 4,5 - குரோவேஷிய நாட்டிற்கானத் திருத்தந்தையின் முதல் திருப்பயணம்


ஏப்ரல்19,2011. குரோவேஷிய நாட்டின் தேசிய கத்தோலிக்கக் குடும்ப தின விழாவில் கலந்து கொள்வதற்கென வருகிற ஜூன் 4,5 தேதிகளில் அந்நாட்டிற்கானத் தனது முதல் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஜூன் 4ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை, குரோவேஷியத் தலைநகர் சாக்ரப், Pleso அனைத்துலக விமான நிலையத்தை முற்பகல் 11 மணிக்குச் சென்றடைவார். பின்னர் அந்நாட்டின் அரசுத்தலைவர் Ivo Josipovic, பிரதமர் Jadranka Kosor ஆகியோரைச் சந்திப்பார். பின்னர் நாட்டின் அரசு, கல்வி, வணிகம் மற்றும் கலாச்சாரத் தலைவர்களைச் சந்திப்பார். அன்று மாலையில் சாக்ரப் வளாகத்தில் இளையோருடன் செப வழிபாட்டில் கலந்து கொள்வார்.
5ம் தேதி ஞாயிறன்று சாக்ரப் நகர் குதிரைப்பந்தயத் திடலில் குரோவேஷியக் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கெனத் திருப்பலி நிகழ்த்துவார். மாலையில், கர்தினால் Alojzije Stepinac கல்லறையில் செபித்து ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியருடன் சேர்ந்து மாலைத் திருப்புகழ்மாலை செபிப்பார் திருத்தந்தை.
1937 முதல் 1960 வரை சாக்ரப் பேராயராக இருந்த கர்தினால் Stepinac, இராணுவ அதிகாரி Tito வின் கம்யூனிச ஆட்சியில் துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தவர்.
குரோவேஷியாவின் மொத்த மக்கட்தொகையில் 87.8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.