2011-04-18 14:17:34

வாரம் ஓர் அலசல்- “வெல்லட்டும் புனிதப் போர்”


ஏப்ரல் 18,2011: Laurent Gbagbo. இவர் மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டின் நான்காவது முன்னாள் அரசுத் தலைவர். இம்மாதம் 13ம் தேதி இவரும் இவரது மனைவி சிமோனேயும் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் வடக்குப் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், "தேசிய மற்றும் சர்வதேச அளவில்" குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளனர். ஐவரி கோஸ்ட் நாட்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர்க்கானத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய இவர் பதவியை விட்டு இறங்க மறுத்தார். ஆனால் அத்தேர்தலில் முறைப்படி வெற்றி பெற்ற அலசேன் குவாட்டாராவுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்தன. எனவே குவாட்டாராவின் ஆதரவாளர்களுக்கும் பாக்போவின் படைகளுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகக் கடும் சண்டை நடைபெற்றது. அதில் அப்பாவி பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர் மற்றும் இலட்சக்கணக்கில் புலம் பெயர்ந்தனர். இந்த ஐந்து மாத ஆயுதச் சண்டையில் நியாயம் வென்றது. பாக்போ இப்போது வீட்டுக் காவலில். அவர் மட்டுமல்ல, அவரைச் சேர்ந்தவர்களும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்கள்.
ஒரு தலைவர் சொன்னார் – “எந்தத் துறையானாலும் ஒருவர் உயர்ந்த பீடத்திற்குச் சென்ற பிறகு அதைப் பயன்படுத்திப் பலவீனங்களுக்கு ஆட்பட்டு விடுவாரேயானால் அவருக்கு ஏற்படுகின்ற வீழ்ச்சி மிகக் கொடியதாக இருக்கும்” என்று. இதுதான் ஐவரி கோஸ்ட்டில் நடந்தது. எகிப்து, டுனிசியா போன்ற அரபு நாடுகளிலும் இதுதான் நடந்தது. இப்போது ஏமன், சிரியா, லிபியா போன்ற நாடுகளிலும் அரசுத் தலைவர்களுக்கு எதிரானப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் கட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சேர வேண்டும்' என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த பிரமுகர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். வீழ்த்தப்பட்டுள்ள இந்த நாடுகளின் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பொது மக்களின் செல்வாக்கைச் சம்பாதித்திருந்தால் இந்நிலை இவர்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. சுதந்திர இந்தோனேசியாவின் இரண்டாவது அரசுத் தலைவரான சுஹார்த்தோ (Suharto) 1967ம் ஆண்டு முதல் சுமார் 32 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தவர். தலைசிறந்த தலைவராக நோக்கப்பட்ட இவரது ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கில் 1990களில் மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே இவர் பதவியை துறக்க வேண்டியதாகியது.
Helmut Josef Michael Kohl. இவர் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகளைப் பிரித்துக் கொண்டிருந்த பெர்லின் சுவர் இடிந்து இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்த ஒரே நாட்டின் பிரதமராக இருந்தவர். ஆனால் இவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தென்னாப்ரிக்கா இந்தியாவிடம் தோற்க வேண்டும் என்பதற்காக, அந்நாட்டில் ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த Wessel Johannes "Hansie" Cronje என்பவர் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்று தென்னாப்ரிக்கா தோல்வியடையக் காரணமாக இருந்தார். இந்தியாவில் இடம் பெற்றுள்ள அண்மை ஊழல்கள் மறைவானதல்ல. ஆம். ஊழல் என்பது தையல் ஊசி முனைக்குள் என்ன, எந்த முனைக்குள்ளும் நுழைந்து விடும் சக்தியுடையது. மனிதனின் பண ஆசை, பதவி ஆசை அவனை இப்படிப் புரட்டிப் போடுகிறது. ஒருவர் வாழ்க்கையின் உச்சத்திற்குச் செல்வதைப் பார்த்து அவருடைய குடும்பம் மட்டுமல்ல, சுற்றமும் சமூகமும் நாடும் மகிழ்ச்சியடைகின்றது. ஆனால் அதே ஆள் பலவீனங்களுக்கு ஆட்பட்டுவிடுவாரேயானால் அவருக்கு ஏற்படுகின்ற வீழ்ச்சி மிகக் கொடியதாக இருக்கின்றது. தென்னாப்ரிக்க ஹேன்சி கிரிகெட் போட்டியில் ஒருபோதும் விளையாட முடியாதபடி தடை செய்யப்பட்டு விட்டார். அன்பர்களே, நீதி தேவதை நீண்ட காலம் பொறுமை காக்கமாட்டாள்.
இத்தகைய ஊழலிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் நோக்கத்தில் அன்னா ஹசாரே என்பவர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஜன லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி இவர் துவக்கிய அகிம்சைப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு அலை பெருகியது. இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசும் முன்வந்துள்ளது. அசராத சமூகப் போராளியாகிய அன்னா ஹசாரே, இதன்மூலம், இந்திய நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டார். அவர் தனியார் செய்திச் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சொன்னார். RealAudioMP3 “இந்த மசோதா 42 ஆண்டுகளாக நிலுவையில் கிடத்தப்பட்டுள்ளது. பத்து தடவைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த எனது இப்போதையப் போராட்டப் பயணம் முழு வெற்றி பெற்றால், அது நம் நாட்டிற்கும், பாமர மக்களுக்கும் கிடைக்கும் சுதந்திர தினப் பரிசாக இருக்கும். ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் ஆவார்கள். அரசுப் பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும். திரும்பவும் ஊழல் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். அதிலும் அவர்கள் திருந்தவில்லையெனில், அந்த ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க வழி பிறக்கும். காந்தியத் தொண்டராக இருக்கும் நான் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுவது பிழையாகக்கூடத் தோன்றலாம். ஆனால் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஊழல் செய்து சொத்து சேர்ப்பவர்களுக்கு, அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும் என நம்புகிறேன். இப்போது அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தயாரிப்புக்காக, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள், வாதங்கள், எதிர்வாதங்கள், தீர்வுகள் என எல்லாவற்றையுமே வீடியோ எடுத்திட வேண்டும். அப்போது தான் ஒளிவுமறைவு இருக்காது. எல்லாமே வெளிப்படையாக அமையும். ஒளிவுமறைவுகள் தான் ஊழலுக்கு முதல் காரணம்”.
நேயர்களே, இந்த லோக்பால் மசோதா தயாரிப்பதற்காக, அரசு மற்றும் சமூக பிரதிநிதிகள் அடங்கிய குழு முதன்முறையாக இச்சனிக்கிழமை கூடியது. இருதரப்பினரும் தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தத்தமது மாதிரி மசோதாக்களை பகிர்ந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் முழு நடவடிக்கைகளும் ஒலிப்பேழையில் பதிவு செய்யப்பட்டன. இருதரப்பும் மீண்டும் மே 2ம் தேதி சந்தித்து அடுத்த கட்ட ஆலோசனைகள் மேற்கொள்வது என்றும், வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என இஞ்ஞாயிறன்று செய்திகள் வெளியாகின.
இன்றைய நிலைமையில் கல்விக்கு இலஞ்சம், வேலைக்கு இலஞ்சம், மருத்துவத்துக்கு இலஞ்சம்.... இப்படி பல. எனவே இந்த இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில், அன்பு நேயர்களே, உங்கள் ஒவ்வொருவரது பங்களிப்பு என்ன? அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புக்கான புனிதப் போர் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. என்ன செய்தால் சமூகத்தில் இலஞ்சத்தை ஒழிக்கலாம்? உங்கள் ஆலோசனைகளை எழுதுங்களேன்.
இஞ்ஞாயிறு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் கலந்து கொண்ட சுமார் ஐம்பதாயிரம் பேரிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய உலகின் தீமைகள் பற்றிப் பேசினார். இன்றைய நவீனத் தொழில் நுட்பமும் மனிதனின் திறமைகளும் நன்மைகளை மட்டுமல்ல, தீமைகளுக்கான வாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளன. அண்மை மாதங்களில் மனித சமுதாயத்திற்கு அதிகத் துன்பங்களைக் கொண்டு வந்த பேரிடர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மெய்யியலாளர் ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் மனிதத் தீமைகளுக்கானத் தீர்வை இயேசு கிறிஸ்துவில் கண்டார் என்றார் திருத்தந்தை.
RealAudioMP3 கடவுளை மறந்து கடவுள் பயமின்றி வாழும் மனிதன் பணத்திற்கு அடிமையாகின்றான். பேராசையில் கோடி கோடியாய்ப் பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து ஊழல் செய்கின்றான். தானும் தீமையில் உழன்று பிறரும் அந்தத் தீமையில் சிக்கக் காரணமாகின்றான். பெரியோர் சொல்கிறார்கள்.........
தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான். ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே. மனிதன் முன்பாக வெட்கப்படு. அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்








All the contents on this site are copyrighted ©.