2011-04-18 14:20:49

வருகிற மே மாதம் அயர்லாந்தில் நடைபெறும் தேர்தலையொட்டி அயர்லாந்து ஆயர் பேரவை விசுவாசிகளுக்கு விண்ணப்பம்


ஏப்ரல் 18, 2011. வருகிற மே மாதம் 5ம் தேதி அயர்லாந்தில் நடைபெறும் தேர்தலில் வறுமை குறித்த கேள்விகளை, சிறப்பாக வறுமையில் வாடும் சிறார் குறித்த கேள்விகளை மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அயர்லாந்து ஆயர் பேரவை விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டது.
"ஆபத்திலிருந்து நம்பிக்கை நோக்கி: பொதுவான நலனுக்காக உழைப்பது" என்ற தலைப்பில் அயர்லாந்து ஆயர் பேரவையின் சமுதாய விவகாரங்கள் பணிக்குழு இவ்வியாழனன்று Belfast நகரில் நடத்திய ஒரு கருத்தரங்கில் இந்த வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
உலகில் உருவாகியுள்ள பொருளாதாரச் சரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று என்றும், இந்தச் சரிவிலிருந்து வருங்காலத்தைக் காப்பது நம் கடமை என்றும் சமுதாய விவகாரங்கள் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Noël Treanor கூறினார்.
வட அயர்லாந்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் என்று சுட்டிக் காட்டிய ஆயர் Treanor, இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு துன்பம் என்று கூறினார்.
இச்சூழலில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்தப் பிரச்சனைகளை மனதில் கொண்டு தன் மனசாட்சியின் அடிப்படையில் பொது நலனை முன்னிறுத்தும் முயற்சிகளுக்கு வாக்களிக்குமாறு ஆயர் Treanor கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.