2011-04-16 16:15:15

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கடந்த பல வாரங்களாக, இந்தியாவில் ஒரே கூட்டங்களும், கொண்டாட்டங்களுமாய் நாடு சப்தத்தில் மூழ்கியிருந்தது. பள்ளி இறுதித் தேர்வு எழுதும் பல இளையோரின் கவனத்தைத் திசை திருப்பும் வண்ணம் கிரிக்கெட் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஏப்ரல் 2ம் தேதி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால், கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. இந்தக் கொண்டாட்டங்கள் முடிந்த கையோடு, தமிழ் நாட்டில் தேர்தல் கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆரம்பித்தன. இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த புதன் நடைபெற்ற தேர்தலோடு முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விடும்போது, இப்போது மீண்டும் மற்றொரு கிரிக்கெட் விழா நடைபெற்று வருகின்றது. இப்படி கூட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் நாம் செலவழிக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் நாம் எங்கே போகிறோம், எதை நோக்கிப் போகிறோம் என்ற கேள்விகளே தங்குகின்றன.
தேர்தலையொட்டி நடைபெறும் பெரும்பாலான ஊர்வலங்கள், கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டவைகளாகவே இருந்திருக்கும். இந்தக் கூட்டங்களும், ஊர்வலங்களும் ஒருவரது பெருமையை, சக்தியை, பலத்தை பறை சாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளே. ஒருவகையில் இவை செயற்கையான ஆர்வத்தையே வெளிப்படுத்தும் முயற்சிகள் என்று கூறலாம்.
இவற்றிற்கு முற்றிலும் மாறாக, புது டில்லியில் ஏப்ரல் 5ம் தேதி ஒரு போராட்டம் ஆரம்பமானது. இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கேள்வி கேட்க, கட்டுப்படுத்த Jan Lokpal மசோதா நடைமுறைப்படுத்தபட வேண்டுமென்று 72 வயதான Anna Hazare (Kisan Bapat Baburao Hazare) புது டில்லியில் ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம் பல இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திரண்ட இந்த மக்கள் ஆதரவு புது டில்லியை ஆட்டிப்படைத்தது. உயர்ந்ததொரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திலும் இப்போது அரசியல் கலந்துவிட்டதைக் காணும்போது மனம் வேதனைப் படுகிறது.
இந்த 2011ம் ஆண்டில் மக்கள் சக்தியை, மக்களின் விடுதலை வேட்கையைப் பல நாடுகள் கண்டுள்ளன. துனிசியாவில் ஆரம்பமான இந்தப் புரட்சியை ஊடகங்கள் 'முல்லைப் புரட்சி' (Jasmine Revolution) என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் புரட்சி பின்னர் எகிப்து, லிபியா என்று பல நாடுகளில் பரவியது. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் இந்த நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டெழுந்ததை நாம் ஊடகங்களில் பார்த்தோம். மக்கள் சக்தியை உணர்த்தும் இந்தக் கூட்டங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துள்ளன. அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியுள்ளன. இப்படி ஒரு கூட்டம், ஓர் ஊர்வலம் அன்று எருசலேம் நகரில் நடந்தது. இயேசு என்ற ஓர் இளைய போதகரின் வடிவில் எருசலேமுக்குள் ஒரு சூறாவளி நுழைந்தது.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை வேரோடு சாய்க்கும், பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும் போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றின. வழக்கமாய், எருசலேமில் நடத்தப்படும் வெற்றி ஊர்வலங்கள் அரசு அதிகாரிகளால், அல்லது மதத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படும். குருத்து ஞாயிறன்று நடந்த இந்த ஊர்வலமோ மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கும். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகார வர்க்கத்தை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். அவர்களது உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:
மத்தேயு நற்செய்தி 21: 6-11
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.
இயேசு தன் பணி வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்தக் குருத்து ஞாயிறு. இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலை கீழாக்கினார். எனவே, இந்தக் குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
குருத்து ஞாயிறு துவங்கி, உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருச்சபை புனித வாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனித வாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசுவின் உலக வாழ்வின் இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே. அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவைகள் பலவற்றில் புனிதம் எதுவும் காணப்படவில்லையே! நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில் அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்க விட்டனர்.
நான் இப்போது பட்டியலிட்டவைகளில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம் தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்தத் துன்பத்தையும் எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். அதேபோல், இந்த வாரம் முழுவதும் எருசலேமில் நடந்த எல்லா பயங்கரமான நிகழ்வுகளிலும் இயேசு பிரசன்னமாகி இருந்ததால், அவை அனைத்தும் புனிதமாயின. எனவே இது புனித வாரம் எனக் கொண்டாடப்படுகிறது.
இயேசு என்ற சூறாவளி எப்படி அதிகார வர்க்கத்தைப் புரட்டிப் போட்டதோ, அதேபோல் புனிதம், கடவுள் என்ற இலக்கணங்களையும் புரட்டிப் போட்டது. வேறு பல தலைகீழ் மாற்றங்களையும் இந்தக் குருத்து ஞாயிறன்றும், இதைத் தொடரும் நாட்களிலும் நாம் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ள முயல்வோம்.
போட்டிகளில், போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களுக்கு குருத்து வழங்குவது உரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம் குருத்து. வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றால், மற்றவர்கள் தோற்க வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போரில் வெற்றி என்றால், பல உயிர்கள் இறக்க வேண்டும்.
போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத் தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஓர் இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இனியும் வாழ்வார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:
"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவைகளை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியது தான். வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும் அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, தன் இரத்தத்தால் இயேசு என்ற மன்னன் உருவாக்கிய அந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது.
அந்த அரசைப் பறைசாற்ற திருச்சபை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு. புனிதம், வெற்றி, அரசு என்பனவற்றிற்கு புது இலக்கணம் வகுத்து, இறுதியில் கடவுளுக்கும் புது இலக்கணம் சொன்ன இயேசு, இந்த தவக்காலத்தின் இறுதி வாரத்தில் தொடர்ந்து புது பாடங்களை நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.
இறுதியாக ஒரு சிந்தனை: இயேசு என்ற இந்த எளிய மன்னன் எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகளைக் கேட்போம்.
இறைவாக்கினர் செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.