2011-04-16 15:40:59

உலக இளையோர் தினம், இளையோருக்கும் ஸ்பெயினுக்கும் மிகுதியான ஆன்மீகப் பலன்களைக் கொண்டு வரும் - திருத்தந்தை


ஏப்ரல் 16,2011 : வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், உலக இளையோருக்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் மிகுதியான ஆன்மீகப் பலன்களைக் கொண்டு வரும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்துக்கான ஸ்பெயின் நாட்டுப் புதிய தூதர் María Jesús Figa López-Palop ஐ இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் என அனைத்து அதிகாரிகளும் இந்த இளையோர் தினம் சிறப்புற அமையத் தங்களது பங்கை வழங்குவார்கள் என்பதிலும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
ஸ்பெயின் தலத்திருச்சபை மனிதனின் ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்ப்பதில் ஆற்றி வரும் சேவையைக் குறிப்பிட்ட அவர், தாயின் கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும் வரை மனிதனின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
ஒரு நாட்டின் பெரும்பாலான மக்களின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் சமய அடையாளங்களையும் வரலாற்றையும் வெளிப்படுத்துவதைப் புறக்கணிப்பது மனிதனின் இன்றியமையாத சமய சுதந்திர உரிமையை மீறுவதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
ஸ்பெயினின் அனைத்துப் பள்ளிகளிலும் கத்தோலிக்க மதத்தின் போதனைகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஸ்பெயின் நாட்டுத் தூதரிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.