2011-04-15 15:44:01

திருத்தந்தை முன்னின்று நடத்தும் புனிதவாரத் திருச்சடங்குகள் குறித்த விவரங்கள்


ஏப்ரல் 15,2011. திருத்தந்தை முன்னின்று நடத்தும் புனிதவாரத் திருச்சடங்குகள் குறித்த விவரங்களைத் திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
வருகிற ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குருத்துக்களை மந்திரித்த பின் நடைபெறும் ஊர்வலத்தையும், அதைத் தொடரும் திருப்பலியையும் திருத்தந்தை முன்னின்று நடத்துவார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் காலத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் குருத்து ஞாயிறு உலக இளையோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு கொண்டாடப்படும் 26வது உலக இளையோர் நாளுக்கென வழங்கப்பட்டுள்ள மையக் கருத்து: "இயேசு கிறிஸ்துவில் வேரூன்றி, உறுதியான விசுவாசத்தில் கட்டப்படுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
புனித வியாழனன்று காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை எண்ணெய் மந்திரிக்கும் Chrism திருப்பலியையும், மாலையில் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலியையும் திருத்தந்தை நடத்துவார்.
புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில் இயேசுவின் பாடுகள் திருச்சடங்கையும் இரவு 9.15 மணிக்கு Colosseum அரங்கில் சிலுவைப் பாதையையும் திருத்தந்தை நடத்துவார்.புனித சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பாஸ்கா திருவிழிப்புத் திருச்சடங்குகளையும், உயிர்ப்பு ஞாயிறு காலை 10.15 மணிக்குப் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருப்பலியையும் நிகழ்த்துவார். இத்திருப்பலிக்குப் பின்னர் திருத்தந்தை நகருக்கும் உலகுக்கும் என்ற "Urbi et orbi" செய்தியை நடுப்பகல் வேளையில் வழங்குவார்.







All the contents on this site are copyrighted ©.