2011-04-15 15:35:43

சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை


ஏப்ரல் 15,2011. திருச்சபையின் விசுவாசத்தைக் காக்கும் முயற்சியில் உயிரை இழக்கவும் மக்கள் தாயாராக இருக்க வேண்டும் என்று சீன கத்தோலிக்க மக்களுக்கு வத்திக்கான் அழைப்பு விடுத்துள்ளது.
இத்திங்கள் முதல் புதன் வரை வத்திக்கானில் நடைபெற்ற சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவையின் நான்காம் ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2007ம் ஆண்டு உருவாக்கிய திருப்பீடத்தின் இந்தச் சிறப்பு அவை, இவ்வாரத் துவக்கத்தில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் தற்போது சீனாவில் நிலவி வரும் இறுக்கமான சூழ்நிலையை மனதில் கொண்டு 11 அம்சங்கள் அடங்கிய ஓர் அறிக்கையை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.
சீனக் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் வளர்க்கும் படிப்பினைகளில் கவனம் செலுத்துவதும், வழிபாட்டுத் தலங்களை எழுப்புவதும் ஆயர்களின் கடமைகள் என்று எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, குருக்கள் அன்புக்கும், மன்னிப்பிற்கும் எடுத்துக்காட்டுகளாய் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சீன அரசுடன் மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தை முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்பதையே திருத்தந்தை விரும்புகிறார் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.சீனாவில் உழைத்த இயேசு சபை குரு மத்தேயோ ரிச்சியை முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் முயற்சிகளுடன், Paul Xu Guangqiயையும் முத்திபேறு பெற்றவராக உயர்த்துவதற்கு Shanghai மறைமாவட்டம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்து இவ்வறிக்கை தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.