2011-04-15 15:28:35

ஏப்ரல் 16. வாழ்ந்தவர் வழியில்...........


உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவரைப்போல் வேடம்பூண்டு நடிப்பவர்களுக்கு என ஒரு போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை நடத்தியவர்களுக்குத் தெரியாமல் அந்த நடிகரும் அதில் வேடம் பூண்டவராகக் கலந்து கொண்டார். அந்த நடிகர்கள் போல் நடித்துக் காட்டியவர்களுள் இந்த உண்மையான நடிகருக்கு அதில் கிட்டியது மூன்றாம் பரிசே. 2005-ஆம் ஆண்டு நடை பெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் " என்ற கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த நடிகர். பல இலட்சம் யூதர்களை அநியாயமாய்க் கொலை செய்த ஹிட்லரை, 1940ம் ஆண்டில் ஹிட்லர் மிகுந்த அதிகாரத்துடன் இருந்தபோதே இரட்டை வேடத்தில் துணிச்சலுடன் நடித்து கடுமையாய் கிண்டல் செய்தவர் அந்த நடிகர். அவர் தான் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்த சார்லி சாப்ளின்.
சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. ஒரு திரைப்படத்தில் நடன அமைப்பையும் இவர் செய்துள்ளார்.
சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் பிறந்தார். தன் 23ம் வயதில் அமெரிக்கா வந்தடைந்தார். 10 இலட்சம் டாலர் ஊதியம் பெற்ற முதல் நடிகர் இவர். கௌரவ ஆஸ்கார் விருதினை இருமுறை பெற்றார் சாப்ளின்.
மார்ச் 4, 1975 அன்று பிரித்தானிய அரசு இவருக்கு "சர்" பட்டதினை வழங்கியது. இதனை இரண்டாம் எலிசபத் அரசி அளித்தார்.
1985 இங்கிலாந்த் அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு கௌரவித்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்பெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற திரைப்படமாக்கப் பெற்றது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ.
1977 ஆம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு தினத்தன்று அவரது எண்பத்தெட்டாவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின்.








All the contents on this site are copyrighted ©.