2011-04-15 15:44:27

அண்ணா ஹசாரேயின் முயற்சிகளிலிருந்து இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் விலகல்


ஏப்ரல் 15,2011. ஊழலை ஒழிப்பதற்கென புது டில்லியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்ட அண்ணா ஹசாரேயின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தக் கிறிஸ்தவத் தலைவர்களும், பல சமூக ஆர்வலர்களும் தற்போது அவரது முயற்சிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர்.
ஊழலை எதிர்த்துப் போராட்டத்தை ஆரம்பித்த அண்ணா ஹசாரே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துரைத்தது இந்தக் கருத்து வேறுபாட்டிற்கு காரணம் என்று UCAN செய்தி கூறுகிறது.
2002ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடைபெற்ற கலவரத்தில் 2000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட பொது, அந்தக் கலவரத்தில் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்ற முறையில், ஊழல் ஒழிப்புப் போராட்டத்திற்கு என் முழு அர்ப்பணமும் உண்டு எனினும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் நச்சு சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதையும் அதே மூச்சில் சொல்லிக்கொள்ள விழைகிறேன் என்று புது டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செச்சாவோ கூறினார்.
ஊழலில் ஊறிப்போயிருக்கும் குஜராத் அரசைத் தலைமையேற்று நடத்தும் நரேந்திர மோடியை அண்ணா ஹசாரே பாராட்டியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்றும், ஊழலுக்கு எதிராக அவர் மேற்கொண்ட இந்த நாடு தழுவிய போராட்டத்தின் சக்தியை இந்த பாராட்டு வெகுவாகக் குறைத்துள்ளது என்றும் மனித உரிமை ஆர்வலாரான இயேசு சபைக் குரு செட்ரிக் பிரகாஷ் கூறினார்.அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்குத் தன் ஆதரவை அளித்து வந்த புகழ்பெற்ற நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், நரேந்திர மோடியை ஹசாரே புகழ்ந்ததையடுத்து, தன் ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.