2011-04-14 15:50:50

பாகிஸ்தானை ஒரு சமய சார்பற்ற நாடாக மாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள்


ஏப்ரல் 14,2011. பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்தவ சபைகளும் அந்நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறினர்.
அரசின் சார்பில் இப்புதனன்று லாகூரில் நடைபெற்ற கருத்தரங்கில் இத்தலைவர்கள் பேசுகையில், பாகிஸ்தானை ஒரு சமய சார்பற்ற நாடாக மாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஒரு முதல் முயற்சியாக அந்நாட்டின் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகள் வன்முறையாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறதென்றும், தற்கொலைப் படையினரின் தாக்குதல்கள் மிகச் சாதாரண நிகழ்ச்சிகளாக மாறி வருகின்றன என்றும் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தேசிய இயக்குனர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani கூறினார்.
பாகிஸ்தானில் அனைத்து சட்டங்களையும் இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் அந்நாடு அண்மையில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஒய்வு பெற்ற நீதிபதி Nasira Javed, ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, பாகிஸ்தானில் சிறுபான்மையினரைத் துன்பங்களுக்கு உள்ளாக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.அண்மையில் லாகூர் பேராலயத்திற்கு முன் விவிலியம் கிழிக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டபோது, கத்தோலிக்கத் தலைவர்கள் காட்டிய பொறுமை, அவர்கள் கத்தோலிக்கருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் விடுத்த அமைதி அழைப்புக்கள் மற்றவர்களுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆங்கலிக்கன் ஆயர் மைக்கேல் நாசிர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.