2011-04-14 15:51:27

இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவுகள் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு - கிறிஸ்தவத் தலைவர்கள்


ஏப்ரல் 14,2011. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுற்றாலும், இன்னும் அந்நாட்டு மக்கள் முற்றிலும் எழுந்து நடக்க முடியாத வண்ணம் மண்டியிட்டே உள்ளனர் என்றும் அவர்களை மீண்டும் எழுந்து நடக்க வைப்பது கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
'சமுதாய மாற்றத்தில் கிறிஸ்தவர்களின் பொறுப்பு' என்ற தலைப்பில் இலங்கைக் காரித்தாஸ் மையத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இக்கருத்து கூறப்பட்டது.
பிறரன்புச் சேவையைத் தாண்டி, சமுதாய மாற்றத்திற்குத் தேவையான முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட வேண்டுமென்றும் இந்த மாற்றங்களை உருவாக்கும்போது, கிறிஸ்தவ அமைப்புக்கள் தங்கள் சுய அடையாளங்களையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஒய்வு பெற்ற ஆங்கலிக்கன் ஆயர் Kumara Illangasinghe கூறினார்.திருச்சபையும் பிற கிறிஸ்தவ அமைப்புக்களும் துன்புறும் மக்கள் பக்கமே இருக்க வேண்டும், இந்த முயற்சியில் ஈடுபடும் நாம் அனைவரும் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடுகளை மறந்து கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சமுதாய மாற்றத்தில் ஈடுபட வேண்டுமென இயேசு சபை குரு Lasantha de Abrew கூறினார்.







All the contents on this site are copyrighted ©.