2011-04-14 15:51:41

'இலங்கைப் போர்க் குற்றப் பொறுப்பு' - ஐநா அறிக்கை தயார்


ஏப்ரல் 14,2011. இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழு ஐ.நா. அவையின் தலைமைச் செயலரிடம் அதன் அறிக்கையை நியுயார்க்கில் இப்புதனன்று சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பணியைச் செய்து முடித்ததற்காகக் குழுவினரைப் பாராட்டிய தலைமைச் செயலர் பான் கி மூன், இவ்வறிக்கையின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடுத்து வரும் நாட்களில் முடிவு செய்வதாகக் கூறினார்.
இந்த அறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடு முன்னர், இவ்வறிக்கையின் பிரதியை நாகரிகம் கருதி இலங்கை அரசுடனும் பகிர்ந்துகொள்வார் என ஐ.நா.வின் உயர் அதிகாரி ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கை அரசு இந்த அறிக்கையை நிராகரித்திருக்கிறது. இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஐ.நா.அவையின் வல்லுநர் குழு தயாரித்தளித்த இந்த அறிக்கையில், பல குறைபாடுகள் உள்ளன என்று வர்ணித்திருக்கிறது. கடந்த ஆண்டு பான் கி மூன் இந்த வல்லுநர் குழுவை நியமித்ததிலிருந்தே இலங்கை அரசு இந்த நியமனத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது என்பதும், அந்தக் குழு உறுப்பினர்களை இலங்கைக்குள் வந்து ஆய்வு செய்ய அனுமதி தர மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.