2011-04-13 16:07:47

மங்களூரில் சிறார் இல்லங்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல சமயங்களின் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்


ஏப்ரல் 13, 2011. கடந்த வாரம் மங்களூரில் இந்து அடிப்படைவாதக் குழுக்களால் சிறார் இல்லங்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூர் மாவட்ட காவல் அதிகாரி அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழைக் குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை எதிர்த்து பல சமயங்களின் 37 அமைப்புக்களைச் சார்ந்த 4000௦ பேருக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற தவறான காரணத்தைச் சுட்டிக் காட்டி, இந்து அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் இப்புதிய தாக்குதல்கள் கண்டனத்திற்குரியதென்று அனைத்து சமயத்தினரும் கூறினர்.
மங்களூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் மட்டும் 80000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்; இதேபோல் இந்தியாவின் அனைத்து கிறிஸ்தவப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவியரை மதம் மாற்றும் முயற்சியில் கிறிஸ்தவ பள்ளிகள் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல என்று கிறிஸ்தவத் தலைவர் Vincent Alva கூறினார்.
இந்தியாவில் வாழும் நாம் கிறிஸ்தவர்களாய், இஸ்லாமியர்களாய், இந்துக்களாய் இருக்கிறோம். ஆனால், இவை அனைத்திற்கும் மேலாக நாம் இந்தியர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று இஸ்லாமியத் தலைவர் Ali Hasan கூறினார்.2008ம் ஆண்டு கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.