2011-04-13 16:08:43

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


ஏப்ரல் 13, 2011. இத்தாலியின் உரோம் நகர் தற்போது அனுபவித்து வரும் வசந்த காலமும் கோடை காலமும் கலந்த ஒரு தோற்றத்தைத் தந்து கொண்டிருக்க, செவ்வாய் இரவு பெய்த சிறு மழையால், வெப்பம் ஓரளவு தணிந்த நிலையில், திருத்தந்தையின் இவ்வார புதன் பொதுமறைபோதகம் உரோம் தூயபேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்றது. புனிதர்கள் பற்றிய இப்பொதுமறைபோதகத் தொடரின் நிறைவுரையாக இன்று, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றிருக்கும் புனிதத்துவம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என தன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை.
புனிதத்துவம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முழு நிறைவாகும். அது கிறிஸ்துவிலான வாழ்வாகும். நாம் கிறிஸ்துவில் ஒன்றிணைந்து, அவரின் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நமதாக்கி, அவர் வாழ்வுக்கு இயைந்ததாய் நம் வாழ்வையும் உறுதிப்படுத்துவதை உள்ளடக்கியதாகும் அது. இவ்விதம் பார்க்கும்போது, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான ஒன்றிப்பில் ஒரு புதிய வாழ்வை வாழ்வதற்கு உதவும் வகையிலும், அவரின் பாஸ்கா மறையுண்மையில் பங்குதாரர்களாகவும் மாற்றிய திருமுழுக்கின் வழி நம் இதயங்களில் பொழியப்பட்ட தூய ஆவியின் பணியாகும் இது. பிறரன்பு எனும் வீரத்துவ பண்பு அதன் முழு நிறைவில் வாழப்படுவதே கிறிஸ்தவ புனிதத்துவமாகும். இந்த புனிதத்துவத்திற்கான நம் தேடலில் நாம் கடவுளின் வாழ்வு மற்றும் அன்பின் விதைகள் நம்மில் பயிரிடப்பட்டு வளப்படுத்தப்பட அனுமதிக்கிறோம். இறைவனின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து அதை கடைபிடிப்பது, செபம் மற்றும் அருளடையாளக் கொண்டாட்டங்கள், நம் சகோதர சகோதரிகளுக்கான தியாகம் மற்றும் பணிகள் ஆகியவைகளின் வழியாக இது நிகழ்கிறது. முடிவற்ற வாழ்வின் முழுநிறைவை நோக்கிய இப்பாதையில் நமக்கு ஊக்கம் தருபவைகளாக புனிதர்களின் வாழ்வு உள்ளது. அவர்களின் செபங்கள் மற்றும் தூய ஆவியின் அருளின் உதவியுடன் நாம் நம் கிறிஸ்தவ அழைப்பை முழுவதுமாக வாழ்வோமாக. அவ்வாறு வாழ்வதன் வழி, கிறிஸ்து வரலாற்றில் உருவாக்கி வரும் புனிதத்துவம் எனும் பன்னிற அழகு வடிவின் ஒரு கல்லாக நாமும் மாறி, கிறிஸ்துவின் முகத்தில் ஒளிர்விடும் மகிமையானது அதன் உன்னத முழுச் சீர்சிறப்புடன் காணப்பட உதவுவோமாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.