2011-04-13 16:08:49

ஐ.நா.அமைப்பு கொண்டாடிய மனிதகுலத்தின் விண்வெளி பயணத்திற்கான முதல் அகில உலக நாள்


ஏப்ரல் 13, 2011. மனிதகுலத்தின் விண்வெளி பயணத்திற்கான முதல் அகில உலக நாளை ஐ.நா.அமைப்பு இச்செவ்வாயன்று கொண்டாடியது.
1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சோவியத் ஒன்றியத்தின் முதல் முயற்சியாக இரஷ்யாவைச் சேர்ந்த Yuri Gagarin விண்வெளிக்கு பயணித்த நாளின் பொன்விழாவைக் கொண்டாடும்போது, அந்நாளை விண்வெளி பயணத்திற்கான அகில உலக நாளாக ஐ.நா.அறிவித்துள்ளது.
விண்வெளிப் பயணம் என்பது மனிதப் பிறவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு மேலான முயற்சி என்றும், Yuri Gagarin மேற்கொண்ட இந்த 108 நிமிட விண்வெளிப் பயணத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி இந்நாள் கொண்டாடப்படும் என்றும் ஐ.நா.வின் உயர் அதிகாரி Mazlan Othman கூறினார்.
இதற்கிடையே, இந்த ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டங்கள் இரஷ்யாவின் கிரெம்லின் மாளிகையில் ஐம்பது துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுடன் நினைவுகூரப்பட்டது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வானியலாளர்களுடன் வீடியோ மூலம் பேசிய இரஷ்ய அரசுத்தலைவர் டிமித்ரி மெத்வதேவ், விண்வெளி ஆராய்ச்சி என்பது இரஷ்யாவின் முன்னணி இலக்குகளில் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார். இதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகளை தமது நாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐநூற்றுக்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் வான் மண்டலத்திற்கு சென்று திரும்பியிருக்கின்றனர் என்றும், Yuri Gagarin தன்னந்தனியாக ஒற்றையடிப்பாதையில் மேற்கொண்ட விண்வெளிப்பயணம் இன்று பலரும் பயணம் செய்யக்கூடிய நெடுஞ்சாலைப் பயணமாக வளர்ந்திருக்கிறது என்றும் BBC செய்தியொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.