2011-04-12 12:22:57

படகு விபத்தில் சிக்கிய ஆப்ரிக்க அகதிகளுக்கான செபத்திற்கு விண்ணப்பிக்கிறார் திருப்பீடப்பேச்சாளர்


ஏப்ரல் 12, 2011. அண்மைக்காலங்களில் வட ஆப்ரிக்காவின் மோதல்களால் தப்பியோடும் அகதிகள் மத்தியதரைக் கடலில் மரணமடைந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
கடந்த வாரத்தில் 250 அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது பற்றிக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், பஞ்சம், பட்டினி, ஏழ்மை, அடக்குமுறை, வன்முறை மற்றும் போரால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்கள், இத்தகைய விபத்துக்களால் அடையாளம் தெரியாமலேயே மறைவது ஆழ்ந்த கவலை தருவதாக உள்ளது என்றார்.
தொலைக்காட்சியில் வாரந்தோறும் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியின்போது இதனைக்குறிப்பிட்ட அவர், இவ்வுலகின் ஏழைகளுடன் நம் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக அவர்களை நினைவுகூர்ந்து செபிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.
பகைமை உணர்வுகளைக் கைவிட்டு, அநீதி, பாராமுகம், சுயநலம் ஆகியவைகளை அகற்ற நம்மை அர்ப்பணிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் இயேசு சபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.