2011-04-11 16:11:49

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.


ஏப்ரல் 11, 2011. பாவத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆன்மீக வாழ்வு மற்றும் இறப்பிற்கு பின்னான வாழ்வு, என இயேசு கொணர்ந்த வாழ்வில் மேன்மேலும் விசுவாசம் கொண்டு வாழுமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மேற்கோள் காட்டி உயிர்த்தெழுதல் பற்றி தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையில் குறிப்பிட்ட பாப்பிறை, கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட உயிர்த்தெழுதல் குறித்த விசுவாசம், சந்தேகங்களையும் குழப்பத்தையும் எதிர்கொள்வதுண்டு, ஏனெனில் இது பகுத்தறிவு வாதங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்று உரைத்தார்.
மரணம் என்பது ஒரு சுவர் போன்று அதற்கு பின்னால் இருப்பதை மறைத்து நிற்கின்றது, இருப்பினும் நம் இதயம் அச்சுவரையும் தாண்டிச்செல்ல ஆவல் கொள்கின்றது என்றார் திருத்தந்தை.
சாவு எனும் சுவரை தகர்த்தெறிந்த கிறிஸ்து மீது மரணத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்ற திருத்தந்தை, ஆனால் பாவம் எனும் ஆன்மீகச் சாவே அவருக்கு மிகப்பெரும் துன்பகர போராட்டத்தை வழங்கியது என்று கூறினார்.
இந்தச் சாவை தோல்வியுறச்செய்யவே இயேசு கிறிஸ்து மரணத்திற்கு தன்னை கையளித்தார், அவரின் உயிர்ப்பு என்பது முந்தைய வழ்விற்குத் திரும்பிச்செல்லும் ஒன்றல்ல, மாறாக ஒரு புதிய உலகிற்கும் உண்மைத்தன்மைக்கும் வழி திறப்பதாகும் என்றார்.
பாஸ்கா மறையுண்மையை திருச்சபையோடு இணைந்துக் கொண்டாட நம்மைத் தயாரித்து வரும் இவ்வேளையில், கிறிஸ்துவின் வாக்குறுதிகளிலான நம் விசுவாசத்தைப் புதுப்பிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்து தன் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.