2011-04-11 16:18:07

உலகில் அகதிகளுக்கான அக்கறை குறைந்து வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளது JRS அமைப்பு.


ஏப்ரல் 11, 2011. அடைக்கலம் தேடி இங்கிலாந்துக்குள் நுழைவோர்களுக்கானப் பணிகளில் 60 விழுக்காட்டிற்கு மேல் தற்போது அந்நாடு குறைத்துள்ளது, அகதிகளில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளது இயேசு சபையினரின் அகதிகளுக்கான அமைப்பு.
நிதி நெருக்கடிகளால் செலவீனங்களைக் குறைப்பதற்காக இந்நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், ஏழை எளியோராய் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கான நம் கடமைகள் மறக்கப்பட்டுவிடக்கூடாது என்றார் இயேசு சபை குரு Stephen Powers.
JRS என்ற இயேசு சபை அகதிகள் அமைப்பைச் சேர்ந்த இவர் பேசுகையில், இன்றைய உலகில் பல நாடுகளின் அகதிகள் பிரச்னைகள், பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வராததாலேயே அவைகளுக்கு தீர்வு கிட்டிவிட்டது என்று அர்த்தம் கொண்டுவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
லிபியாவிலிருந்து வெளியேறி வரும் மக்கள், எரித்ரியா மற்றும் டார்ஃபூர் அகதிகள், ஜப்பான் சுனாமியாலும் ஐவரி கோஸ்ட் போராலும் குடிபெயர்ந்துள்ள மக்கள் போன்றவர்களின் துன்பநிலைகள் பற்றியும் குறிப்பிட்ட இயேசு சபை குரு Powers, அகதிகளுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை ஒவ்வொருவரும் ஆற்றுவதன் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை இவ்வுலகில் நம்மால் கொண்டு வரமுடியும் எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.