2011-04-09 14:51:47

இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்


ஏப்ரல்09,2011. மேலும், இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல்போன அனைவர் குறித்தும் இலங்கை அரசு பொறுப்பு ஏற்று அவர்கள் குறித்த விபரங்களைக் கூறவேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் Brad Adams வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறையிட்ட போதிலும், இலங்கை அரசு தரப்பிலிருந்து உரிய பதில் வரவில்லை என்று கூறினார்.
வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசு பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.