2011-04-08 15:58:59

ஐவரி கோஸ்ட் ஆயர்களுக்கு ஐரோப்பிய ஆயர்கள் ஆதரவு


ஏப்ரல்08,2011. ஐவரி கோஸ்ட் நாட்டு வரலாற்றில் கடும் துயர காலமாக இருக்கும் இந்நாட்களில் துன்புறும் அந்நாட்டு மக்களுடனான தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் உதவித் தலைவரான Zagreb பேராயர் கர்தினால் Josip Bozanić, ஐவரி கோஸ்ட் நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha வுக்கு எழுதிய கடிதத்தில், ஐவரி கோஸ்டில், குறிப்பாக அபிஜானில் நடக்கும் நிகழ்வுகள் தங்களுக்கு மிகுந்த கவலை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
CCEE என்பது 33 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும்.
மேலும், ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பரில் நடை பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றியடைந்த Alassane Ouattara வின் ஆதரவாளர்கள், தற்போதைய பிரச்சனைக்குரிய முன்னாள் அரசுத் தலைவர் Laurent Gbagbo வின் மாளிகை மீது நடத்திய தாக்குதலில் திருப்பீடத் தூதரகக் கண்ணாடிச் சன்னல்கள் சேதமடைந்திருப்பதாக பேராயர் Madtha இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
இன்னும், இதே நாளில், 24 மணி நேரங்களுக்குள் உயிரோடு எரிக்கப்பட்ட மற்றும் கிணறுகளில் வீசப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்களைக் கண்டதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.