2011-04-08 14:35:57

ஏப்ரல் 09. வாழ்ந்தவர் வழியில்...........


“அறிவு என்பது ஏதோ ஒன்றில் தொடங்கி, அனுமானிக்கப்பட்ட முடிவுகள் அல்ல; நாம் கண்டறியும் ஒன்று தான் அறிவு. உலகை அறிந்து கொள்வதற்கு, முதலில் அதைக் கூர்ந்து நோக்க வேண்டும். முதலில் உண்மைகளைச் சேகரியுங்கள், பின்னர் அந்த உண்மைகளிலிருந்து முடிவுகளை வரவழையுங்கள்”, என்று கூறியவர் ஃப்ரான்சிஸ் பேக்கன்.
அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகத்தை அடியோடு உருமாற்றி விடும் என்பதை உணர்ந்துகொண்ட முதலாவது பெரும் மெய்யியலாளர் இவர்தான் என்று கூறுவர். அறிவியல் ஆராய்ச்சிகளைத் தீவிரமாக ஆதரித்த முதலாவது மெய்யியலாளரும் இவரே. ஃப்ரான்சிஸ் பேக்கன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக இருந்தார். இவர் ஏட்டறிவுவாதியாக இருக்கவில்லை. மாறாக, பட்டறிவை நம்பும் பகுத்தறிவுவாதியாக இருந்தார். அரிய இலக்கியத்திறமை பெற்றிருந்த இவர், அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் பரிவுகாட்டும் மனப்பாங்குடையவராக விளங்கினார்.
1561ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் பிறந்த ஃப்ரான்சிஸ் பேக்கன், ஒரு மெய்யியலாளராக, அரசியல்வாதியாக, வழக்குரைஞராக, நீதிபதியாக, எழுத்தாளராக, அறிவியலாளராக, இன்றைய அறிவியல் முறைகளின் தந்தையாக அறியப்படுகிறார். இங்கிலாந்து அரசவையிலும் அரசியலிலும் பெரும்பதவிகளை வகித்த இவர், நீதிபதியாக இருந்தபோது கையூட்டுப் பெற்றார் என்ற குற்றத்திற்காக பதவி துறந்து, பொதுவாழ்விலிருந்து விலகினார். தன் அறிவியல் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்ட பேக்கன், இறைச்சி கெடாமல் பாதுகாக்கப்பட பனிக்கட்டியைப் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதன் காரணமாக நுரையீரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தன் 65ம் வயதில் 1626ம் ஆண்டு ஏப்ரல் 9ம் நாள் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.