2011-04-08 16:00:47

அரபு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது குறித்து ஐரோப்பிய ஆயர்கள் கலந்துரையாடல்


ஏப்ரல் 08,2011. அரசியல் பதட்டநிலைகளை எதிர்நோக்கும் அரபு நாடுகளுக்கும் அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கும் உதவுவது குறித்து ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளின் ஆயர் பேரவைகளின் ஒன்றியம் விவாதித்து வருகின்றது.
பெல்ஜிய நாட்டு பிரசல்லஸில் " Maghreb மற்றும் Mashriq ல் கிறிஸ்தவத் திருச்சபைகள்" என்ற தலைப்பில் கூட்டம் நடத்தி வரும் ஆயர்கள், நெருக்கடி நிலைகளில் இருக்கும் இந்நாடுகளில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர்.
டுனிசியா, எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா போன்ற அரபு நாடுகளில் நடந்து முடிந்த மற்றும் தற்போது நடந்து வரும் அரசியல் பதட்ட நிலைகள் குறித்துப் பேசிய நெதர்லாந்து ஆயர் Adrianus van Luyn, இந்த 2011ம் ஆண்டின் திருப்புமுனையாகச் செயல்படுகிறவர்கள் இளையோரே என்றார்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் 60 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் ஆயர் குறிப்பிட்டார்.
Mashriq என்பதற்கு கிழக்கு என்று பொருள். இது எகிப்துக்கு கிழக்கேயும் அரேபிய தீபகற்பத்திற்கு வடக்கேயும் உள்ள பகுதியைக் குறிக்கின்றது. Maghreb என்பது மேற்கு என்று பொருள். இது வட ஆப்ரிக்காவின் மேற்கில் அரபு மொழிப் பேசும் பகுதிகளைக் குறிக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.