2011-04-07 15:54:56

சீரோ மலபார் ரீதி ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


ஏப்ரல் 07,2011. இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருச்சபையை வழிநடத்தும் அதிகாரத்தை நேரடியாகப் பெற்ற திருத்தூதர்களின் வேண்டுதல்களால் நாம் இன்றையத் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை சரிவரச் செய்ய முடியும் என்று திருத்தந்தை கூறினார்.
இந்தியாவின் சீரோ மலபார் ரீதி ஆயர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தன் உரையின் துவக்கத்திலேயே, அண்மையில் மறைந்த கர்தினால் மார் வர்கி விதயத்தில் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தியத் திருச்சபைக்கு கர்தினால் விதயத்தில் ஆற்றிய தலை சிறந்த சேவையை நன்றியோடு தான் நினைத்துப் பார்ப்பதாகவும் கூறினார்.
“உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்: பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்” (உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12 : 9-10,16) என்ற பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, பவுல் அடியாரின் இந்த அன்புக் கட்டளை ஆயர்களின் இதயங்களையும் அவர்களது பணிகளையும் வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திருமணங்கள் புனிதமானது, அங்கு உருவாகும் உறவு நிரந்தரமானது என்ற உண்மைகளை திருச்சபையின் படிப்பினைகளிலிருந்தும், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படைகளிலிருந்தும் இளையோருக்கு உணர்த்துவது திருச்சபையின் கடமை என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இளையோருக்கு இவ்வுண்மைகளைப் பொறுமையுடன் உணர்த்துவது திருச்சபையின் கடமை என்றும் கூறினார்.கல்வியிலும், பிறரன்புச் சேவைகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ள கேரளத் தலத் திருச்சபையில் இளையோர் பலர் இறையழைத்தலை ஏற்பதைத் திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டு, இந்த அழைத்தலில் அவர்கள் வளர்வதிலும் ஆயர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.